Friday, December 11, 2009

'தமிழ்ச் செம்மொழி'

தமிழனாக நில்லடா
தலை நிமிர்ந்துச் சொல்லடா!
எட்டுத் திக்குகள்
எங்கும் நிலைப்பது வேதமடா!
அன்னை அறங்கள்
அறிவுத் திறன்கள் ஓங்குதடா!
உலகத் தமிழர்
உண்மை நெஞ்சம் போற்றுதடா!
தமிழ்ச் செம்மொழி
செவியில் இன்பம் பாயுதடா!
இளந்திரை முதுநரை
இளையர் இயக்கம் ஆளுமடா!
எல்லை இல்லை
எதிலும் சாதனை கூடுதடா!
கற்றவர் மற்றவர்
கலந்தக் கரங்கள் எழுதுமடா!
பாரதி கனவுகள்
பண்பு நெறியைப் புகழுதடா!
வந்தே மாதரம்
வாழும் தமிழர் முழக்கமடா!
அறம் பொருள்
அருள் யாவும் வேணுமடா!
ஒன்றே சத்தியம்
ஒருமித்த தமிழ்மொழி ஆகுதடா!
நாடுகள் வட்டம்
நாளும் வாழ்த்திக் கூறுமடா!
எழில் மொழிக்கு
ஏழுலகு ஆசிகள் உறுதியடா!
மாத்தமிழ் மரபு
மலர்ச்சி அடைந்து வெல்லுமடா!
கலைஞர் உள்ளம்
கனிந்துப் பாக்கள் இயற்றுதடா!
இலக்கியப் புதுமை
இதயம் நுழைந்துத் துலக்குதடா!
செம்மொழி செம்மொழி
சிறப்புகள் தமிழை வணங்குதடா!!!!

Wednesday, December 9, 2009

டிசம்பர் பூக்கள்!

குத்து விளக்கேற்ற புதுமனை புகுந்தாள்
குலமகள் நடையினைக் குறிப்பாக இசைத்தாள்!
அத்தான் சகோதர முறைகளை அறிந்தாள்
அத்தை மந்திரக் கட்டுப்பாடு பயின்றாள்!
துடிப்புடன் முதலாம் திங்கள் கடந்தாள்
துணைவன் தங்கைக்கு திருமணம் முடித்தாள்!
இரட்டிப்பு மகிழ்ச்சி கருணைப் பூண்டாள்
இல்லறம் சிறக்க நல்லறம் புரிந்தாள்!
சிப்பிக்குள் சுமந்த நல்முத்தை நுகர்ந்தாள்
சிலிர்த்து மல்லிகைப் பூச்சூடி முடிந்தாள்!
நல்லவன் தம்பிக்கு பணிவிடை செய்தாள்
நம்பிக்கை புகட்டி வேலையில் சேர்த்தாள்!
ஐந்தாம் திங்கள் அமுதம் சமைத்தாள்
அவர்குலச் சுற்றத்தார் புடைசூழச் சென்றாள்!
அய்யனார் கோவிலில் வழிபட்டு நின்றாள்
அறவோர் வாழ்த்த ஆசிகள் பெற்றாள்!
ஆல்போல் தளைத்த குடும்பம் என்றாள்
அறுசுவை அனைத்தும் சுவைத்து மகிழ்ந்தாள்!
ஏழாம் திங்கள் வளைகாப்பு ஏற்றாள்
எழில் மங்கை இடைசுமந்து வளைந்தாள்!
கடமை கண்ணியம் பரிபூரணம் அணிந்தாள்
குழந்தைப் பேறுக்கு தாய்வீடு நுழைந்தாள்!
புதுமணப் பெருமை புகழோடு திகழ்ந்தாள்
பதமறிந்து நவரசப் பாக்களைத் தொடுத்தாள்!
பத்தாம் திங்களில் பச்சிலை உண்டாள்
பச்சிளங் கொழுந்தைப் பெற்றெடுத்து பூரித்தாள்!
குறிச்சி மலர் பெயரிட்டு அழைத்தாள்
குளிர்ந்த மனதோடு புக்ககம் வந்தாள்!
வருடம் நகர்ந்த விதத்தை நினைத்தாள்!
வருடி அழைத்தப் பூக்கரம் தழுவினாள்!

Saturday, December 5, 2009

கூகிள் வலைப்பதிவு!

ஊடகங்கள் வியாபாரமாக
உண்மைகள் ஊசலாடின!
படைப்புகள் மதிப்பிழந்து
பக்கங்கள் விலைபோயின!
உருவாக்கும் குழுமத்தின்
உதிரநீர் திடமாயின!
வடுக்கள் பதியாமல்
வலைப்பதிவுத் தளமாயின!
தனித்தோர் குறிப்புகள்
தமிழில் பதிவாயின!
எளியோர் பயனுற
எழுத்துகள் இலவசமாயின!
சொடுக்கும் நொடியில்
சாதனைக் கூற்றாயின!
பல்லூடகத் தகவல்
பாதுகாப்புப் பகுதியாயின!
படங்கள் பதில்கள்
பாரோர் தொடர்பாயின!
ஜனநாயக முறையே
சரிநிகர் வலுவாயின!
தகுதியும் தரமும்
தகைமைப் படைப்பாயின!
கூகிள் நம்பகம்
குறைவிலா சேவையாயின!!!!

Tuesday, December 1, 2009

கடற்கரை!

கடற்கரை ஓரத்தில் கலங்கரை விளக்கம்
காலாற நடந்தோரின் கவிபாடுது!
மற்கோட்டை கட்டியச் சிறுபிராயம் முதலாக
மதிமயங்கி தோற்றோரின் நிழல்காட்டுது!
சிந்தனைச் சிற்பிகள் வடித்தக் கதைகளை
சிந்தாமல் சிதறாமல் குறிகாட்டுது!
ராகமும் தாளமும் கலந்த நாட்களில்
ரகசியம் பேசிய விதங்காட்டுது!
பட்டொளி வீச்சில் பயிற்சிகள் செய்து
பல்லவன் வடித்த எழில்காட்டுது!
நிலவொளி வட்டிலில் நிலாச்சோறு உண்ட
நெடுங்கால நினைவினை அகங்காட்டுது!
கடலோரப் பாறையில் சுனாமிச் சுரங்கம்
கண்ணெதிர்ச் சோகத்தைப் புறங்காட்டுது!
சிறுகூடல் சிறுவூடல் உணர்ச்சிப் புதையலை
சில்லிடும் கடற்காற்று நிறங்காட்டுது!
தளிர்கொடி இடையாள் துயரால் மெலிந்து
துணிவுடன் வீழ்ந்த இடங்காட்டுது!
தாடி மன்னர்கள் குவளை ஏந்தி
தன்னலம் குன்றிடும் நலங்காட்டுது!
கடற்கரை ஓரம் சிங்க ராஜா
கம்பீரம் காட்டிச் சிரிக்கும் ஒளிகாட்டுது!
கவிச்சோலை அரங்கில் கூடலூர் கவியொலி
கடற்கரைக் காட்சியின் புகழ்காட்டுது!!!!!!

கங்கம்மா


அழகான பச்சைப் பசேலென்ற வயல்வெளி. அதன் பசுமை அனைவரையும் தன்னருகே கவர்ந்திழுத்தது. அதன் ஒரு பக்கத்தில் மலை அடிவாரமும், மற்றோர் பக்கத்தில் நதிக்கரையையும் அமைந்திருந்தது. அதன் அழகை ரசித்த பெண்ணொருத்தி, தன்னை மறந்து அதன் அருகே நடந்து சென்றாள். நதியின் நீரலை அவள் கால்களில் பட்டதும், அதன் குளிர்ச்சியில் மயங்கிக் கரையோரமாகச் சென்று அமர்ந்து கொண்டாள். அவ்வேளையில் அவளின் நினைவுகள் தன்னிச்சையாக எங்கோயோ பயணிக்கத் துவங்கின. அல்லியின் விழிகள் அன்பைத் தேடின.

அல்லி... அல்லி எழுந்திரு. எவ்வளவு நேரமாயிருச்சு. பார்த்தியா கடிகாரத்தை. எவ்வளவு முறை கூப்பிட்டாலும் காது கேட்காதே. உங்க டீச்சர் கிட்ட தான் சொல்லணும். இனிமே பள்ளிக்கு லேட்டாப் போனே என்றவாறு பாட்டி கங்கா அறையினுள்ளே நுழைந்தாள். சரி, சரி! உங்கப்பா குரல் உரக்க வர்றதுக்கு முன்னால போய் குளித்து விட்டு சாப்பிட வா என்றழைத்தாள். கண் விழித்த அல்லி, பாட்டி உன்னைப் பார்த்துக் கொண்டே எந்திரிச்சா குஷியா இருக்கும் என்று சொல்லியவாறு, பாட்டியின் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தாள். பின்பு சந்தோஷத்தில் குதித்துக் கொண்டே குளிக்கச் சென்றாள். அவள் திரும்பி வருவதற்குள்ளாக, பாட்டி படுக்கைகளைச் சரி செய்து விட்டு, மகனுக்கு வேண்டிய டிபன் பாக்சை எடுத்து அலுவலகப் பையினுள் வைத்தாள்.

அத்தே! அத்தே என்ற மருமகள் நர்மதா இன்னிக்கு சாயந்தரம் லேட் ஆயிடும், அதனாலே இன்னிக்கு இரவு நீங்களே வேண்டிய ஆகாரத்தை தயார் செய்திடுங்க என்றாள். தலையாட்டிய பாட்டியின் முன்பாக அல்லி, அமராவதி மற்றும் சரஸ்வதி மூவரும் வந்து நின்றனர். பாட்டி சலித்துக் கொள்ளாமல் பேத்திகளை நோக்கி, இன்னிக்கு என்ன கைக்கடியா இல்லை டிபன் தட்டா என்று அவர்களின் விருப்பத்தைக் கேட்டாள். மூவரும் ஓரப்பார்வை பார்த்து விட்டு கையில் சாப்பாடு பிசைந்து போட்டிடு பாட்டி என்று வரிசையாக அமர்ந்தனர். பாட்டி பிசைந்து கைகளில் இட்ட வற்றல் குழம்பு சாதம் கமகம என்று மூக்கைத் துளைக்க மூவரும் மாறி மாறி கைகளை நீட்டினர். அவர்களின் இடது கைகளில் வைத்திருந்த சுட்ட அப்பளமும், அதனுடன் லபக்கென்று வாயினுள் நழுவிச் சென்றது. கடிகாரம் துள்ளி ஓட, மூவரும் பள்ளிக்குக் கிளம்பிச் சென்றனர்.

அம்மா... அம்மா என்றவாறு காவேரி அக்கா உள்ளே நுழைந்தாள். வாம்மா.. என்று பாட்டி அவளை உள்ளே அழைத்தாள். மாப்பிள்ளை வரலை என்று விசாரித்த பாட்டியிடம், மாலையில் வருவார் எனக் கூறிக்கொண்டே நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டாள். பாட்டி அவளருந்தக் காப்பியைக் கொடுத்தாள். பாட்டி, தனது மூத்த பேத்தி காவேரி தாய்மை அடைந்திருப்பதால் மகிழ்ந்து, அவளிடம் எந்த வேலையையும் கொடுக்காமல், நல்ல கருத்துள்ள பக்திக் கதைகளை அவ்வப்போது கூறுவாள். மேலும், அவளின் உடல் நலத்தைக் கவனித்து அவளுக்குத் தக்கவாறு ஆறுதலாக பதிலளிப்பாள். அன்றைய தினம் அவள் தனக்கு உடல் வலியாக இருக்கிறது என்று கூற, இன்னும் என்ன ஆறு மாதங்களில் குட்டிக் கண்ணன் பிறந்திடுவான் தாங்கிக்கோ என்றவாறு பதிலளித்து விட்டு, ஓய்வெடுக்குமாறு கூறினாள். பிறகு, பாட்டி தான் ஊறப் போட்ட துணிகளைத் துவைத்து விட்டு, மாவு அரைக்கிறேன் எனக் கூறிக்கொண்டே, மீண்டும் சமையல் அறையினுள் நுழைந்தாள். உறங்கச் சென்ற காவேரி பாட்டி நீ முதல்ல சாமியைக் கும்பிட்டு விட்டுச் சாப்பிடு என்றாள். வீட்டிலிருந்து சிட்டாகப் பறந்துச் சென்ற உறவுகள் வருவற்குள்ளாக வேலையை முடிக்கத் தாயாராகிய பாட்டி எப்போது ஓய்வெடுத்தாள். தெரியவில்லை..

ஓடிய கடிகார முள் வேகமாய்க் காட்டியது மாலையின் பிறப்பை. அம்மா... பால் என்றவாறு குரலொளிக்க இந்தா வர்றேன் என்றவாறு பாட்டி வெளியே வந்தாள். பாட்டியம்மா உங்க பேத்தி கீழ விழுந்திருச்சாம். அந்த பாக்கியம் டீச்சரம்மா தான் சொன்னாங்க. ஸ்கூல்ல இருந்து வந்தாக்க ஏதாவது சுத்தி கித்தி போடுங்க என்றாள். எந்தப் பேத்தி எனக் கேட்காமல் விட்டுட்டோமே என்று தனியாகப் புலம்பினாள். சற்று நேரத்தில், பாட்டி.. என்ற குரல் கேட்டு என்னடி குட்டிகளா யார் கீழ விழுந்தீங்க? என்று கேட்டுக் கொண்டே வெளியில் வந்தாள்.
பாட்டி.. பாட்டி இவ தான் என்று சரசுவின் பக்கம் பார்க்க, அடிக் குழந்தே! அடி ரொம்ப பலமா பட்டிடுச்சா என்றாள். இல்லை பாட்டி, என்னுடன் படிக்கிற வகுப்பு மாணவி தான் என்னை விளையாடும் போது தள்ளி விட்டாள் எனக் கொஞ்சியவாறு கூறினாள். உடனடியாக அவளை உட்கார வைத்து காயத்திற்கு மருந்துத் தடவி, உப்பைச் சுற்றிப் போட்டாள். காயத்தின் வலியை, உப்பு சுற்றும் போது வேடிக்கையாகப் பார்த்துச் சிரித்திட மறந்தாள். பேத்திகள் நால்வரும் எங்கு சென்றும் துளசியைச் சுற்றி வணங்க வேண்டாம். ஏனென்றால், புனிதத் தாய் கங்கை அவர்களுக்குள்ளேயே அன்பு வடிவமாக கலந்திருந்தாள்.

கங்கம்மா என்று அழைத்துக் கொண்டே மகன் பணியிலிருந்துத் திரும்ப, இருடா.. என்று கைகளில் வைத்திருந்தக் காப்பியைக் கொடுத்தாள். கருணா என்று கருணையுடன் அழைத்துப் பெரியவ காவேரி வந்திருக்கா எனக் கூறினாள். மிகவும் களைப்பா இருந்ததனால தூங்கச் சொன்னேன் என்றாள். சரிம்மா... பார்க்கறேன் எனச் சொல்லிக் கொண்டிருந்த சமயத்தில் மாப்பிள்ளையும் உள்ளே வந்து நுழைந்தார். உடனே, பலகாரத்தை எடுத்து வந்து வைத்து அவரை உபசரித்தாள். மாமனாரும், மாப்பிள்ளையும் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் பேத்திகளைக் கவனிக்க வீதித் திண்ணைக்குச் சென்றாள்.

கரையோரத்தில் அமர்ந்திருந்த அல்லிக்கு விழியில் தன்னையறியாமல் கண்ணீர் வடிந்தது. துடைத்துக் கொண்டவளின் கண்கள் மறுபடியும் பரவசமாக இயற்கையை இரசிக்க ஆரம்பிக்க, இயற்கை அன்னையே நீ! எங்கு இருக்கிறாய்? இந்த வயல் வெளியிலா அல்லது அதோ தூரத்தில் தெரியும் அந்த மலையிலா? என்றவாறு, பெருமூச்சுடன் நினைவினுள் புதைந்தாள்.

வானம் மப்பும் மந்தாரமுமாக இருளத் துவங்கியது. பாட்டி, ஏண்டா.. கருணா இன்னும் நர்மதா வரலியே என்றவாறு வாசலுக்குச் சென்று அமர்ந்து கொண்டாள். பேத்திகளைத் தன் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டு பள்ளிப் பாடங்களைப் படிக்குமாறு கூறினாள். பாட்டியின் கண்களில், வீதியில் நர்மதா வருகிறாளா எனும் தேடலின் தவிப்பிருந்தன. அதற்குள் அல்லி அருகில் வந்து பாட்டி என்ன பாக்குறே, உனக்கு கண்ணு.. நல்லாத் தெரியுதா என்று கேலி செய்தாள். போடி... பொடிப் புள்ளே உங்கம்மா இன்னும் வரலை, அதைப் பார்க்க விட்டுட்டு என்னிடம் வந்து வம்பா செய்கிறாய் என்றாள். பாட்டி எங்கள நீதான பாத்துக்கறே, அதனாலதான் அம்மா தைரியமா வேலைக்கு போயிட்டு வர்றா என்றாள். மேலும், பாட்டி... பாட்டி அதோ பார் அம்மா.. என ஏமாற்றியபடி விளையாடினாள்.

அம்மா நர்மதா, வீட்டினுள் நுழைந்தவுடன், அப்பாடா! இன்னைக்கு பொழுத ஓட்டியாச்சு என்றாள். அம்மாடி மருமகளே... அந்தோ மேடை மேலே காப்பி வைச்சிருக்கேன் எடுத்துக்கோ என்றாள். அத்தே இன்னைக்கு சம்பளத் தேதி அதனால தான் லேட் ஆயிடுச்சு என்றாள். மாமியார் தயார் செய்து வைத்த இரவுப் பலகாரத்தை அனைவருக்கும் பரிமாற தட்டுக்களை வைத்தாள். நாட்கள் ஒவ்வொன்றாய் கழிந்திட மாதங்கள் வேகமாக உருண்டோடியது.

அல்லி, ஆமாம்! காலத்தின் சுழற்சி வேகமாகச் சுழலச் சுழல செய்திடும் வேலைகளிலும், முறைகளிலும் மாற்றம் வரத்தானே செய்கிறது. இன்னும் எவ்வளவோ அஞ்ஞான மாற்றம், விஞ்ஞான மாற்றம் வரத்தானே போகிறது. இப்போதுள்ள பெண்களுக்கு வேலைக்குச் செல்வது ஒரு பக்கம், பெரியவர்களின் துணையின்றி தவிப்பது ஒரு பக்கம், இருந்த போதிலும் உணர்வில் அன்பு மட்டும் நிலையானது என்பதில் சந்தேகமில்லை. அதில் மட்டும் மாற்றம் வரவில்லையே, வராது என்ற நினைவுக் குதிரை எட்டிப் பிடித்தது அடுத்த ஓட்டத்தை.

அதற்குள் அக்கா காவேரியின் பேறு காலம் வந்து கனிய ஆண் குழந்தையை வாரிசாகப் பெற்றுக் கொடுத்தாள். பாட்டிக்கு ஒரே மகிழ்ச்சி, கொள்ளுப்பேரனை எடுத்து முத்தமிட்டுத் தன் மருமகளிடம் நீயும் பாட்டி ஆகிவிட்டாய் எனக் கூறினாள். பாட்டி கங்காவும், மருமகள் நர்மதாவும், தங்களுக்குள் எவ்வளவு இடையூறுகள் இருந்தாலும், ஒருவரையொருவர் கடமையில் விட்டுக் கொடுக்காமல் பணியாற்றி மற்றவர்களுக்கு பாதையைத் தெளிவாக்கிக் காட்டினர்.

அன்பினால் உருவாக்கிய ஒவ்வொரு விதைகளும் இந்த பூமிக்கு கிடைத்த நல்ல நெல்மணிகளே. முளைத்த நெற்பயிர்கள் மென்மேலும் மக்களின் பசிப்பிணியைப் போக்கி, துயரைத் தீர்த்திடும் புண்ணிய தீர்த்தமாகும் என்று நினைத்தாள். அல்லி மீண்டும் சுயநினைவுக்கு வந்தவளாய் உணர, அவளின் கண்ணெதிரே பூத்திருந்த பசுமை அவளைப் பார்த்துச் சிரித்தது. அவள் பசுமையில் பதித்திருந்த தன் கண்ணைத் தாழ்த்தி அருகிருந்த நதியலையை நோக்கினாள். அதன் அழகும், நீரோட்டமும் தெளிவாகத் தெரிய மறுபடியும் சிலிர்த்து மலைத்தாள்.

பாட்டி கங்கா தன் மருமகளுக்கு செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளையும் குறைவின்றிப் பூர்த்தி செய்து வைத்தாள். கங்காவின் ஆசையை யாருமே தெரிந்து கொள்ள இயலாது. ஏனெனில், அவளுக்கென்று தனி விருப்பம் எதுவுமே இருந்ததில்லை. தன் இளமை வாழ்க்கையில் எதைக் கற்றுக் கொண்டாளோ, இல்லையோ உயிர்களின் மீது நீங்காத அன்பைச் செலுத்தும் திறனைக் கற்றிருந்தாள். அனுதினமும் அதையே தாரக மந்திரமாய் அனைவருக்கும் புகட்டி விட்டாள். தலைமுறைகளுக்கும், தரணியில் தன்னை அறிந்தவர்களுக்கும் நீங்காத அன்பைக் கொடுத்து கருணை மலையாக உயர்ந்து நின்றாள்.
குன்றின் மீது குமரன் இருப்பான். அறிவேன். ஓ! குமரனின் தந்தைதான் சிவன். அப்படியென்றால், அவரின் தலைமீது தான் கங்கா தேவி வாசம் செய்கிறாள். ஆனால், சிவபெருமான் ருத்திரன் என்று தானே கேள்விப் பட்டிருக்கிறேன். ஆம்! அதனால் தான் அன்பின் தெய்வமான கங்கை அவரின் தலை மேல் அமர்ந்திருக்கிறாள். இல்லையென்றால் பிரளயம் அல்லவா ஏற்படும். ருத்திரம் இருக்குமிடத்தில் அன்பிருந்தால் பனிமலை உருவாவது இயற்கைதான். ஏனென்றால், அன்பு அனைத்தையும் வென்று குன்றின் மீது குடிகொள்ளும் என்பது உண்மைதான். பனிமலை உருகி பெருக்கெடுத்தால் தானே கங்கை கிளை ஆற்றுடன் கூடி மகிழ்கிறது. நினைப்பு என்னை ஆழ்த்துகிறது என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டாள் அல்லி.

கங்கம்மா கருணாவிடம் வைத்த அன்பினால், அவனின் புதல்விகளுக்கு திருமணமாகி, அவர்களின் குழந்தைகள் வளர்ந்திடும் வரை வாழ்ந்திருந்தாள். முதுமைத் தள்ளாடி இமயத்தைப் பார்க்க, முக்தி முன்வந்து அன்பினை அணைக்க கருணாவின் மடியில் தன் தலையை வைத்துத் துளசித் தீர்த்தத்தைப் பருகினாள். அதன் குளிர்ச்சியில் மயங்கி கண்மூடி கங்கையில் கலந்தாள். ஆம்! வற்றாத அந்தப் புனித கங்கையைப் போலவே அன்பினால் புனிதமடைந்து ஆருயிர்களின் இதயத்திலே உரமேற்றி விட்டு இப்பூமித்தாயின் மடியைத் தழுவினாள்.

புனித கங்கையாக இந்தப் பூமியில் பாய்ந்து, தவழ்ந்து, பெருக்கெடுத்து ஓடிய வழியெல்லாம் இன்பமடைய அனைவருக்கும் தாகத்தைத் தணித்திடுவாள். கங்கம்மாவின் ஒரு சிலப் பணியினை மட்டும் தானே நினைத்துப் பார்த்தேன், மீதத்தினை.. சரி....சரி... இந்தப் பூமியில் தானே தவழ்கின்றாள். புனித நதி பாய்ந்தோடிய இடங்களில் எல்லாம் அதற்குக் கிளைகள் உண்டு. ஓ... அதன் பெயர் தான் நர்மதா, அமராவதி, சரஸ்வதி மற்றும் காவேரி எனத் தொடர்கிறதா, தொடரட்டும். கங்கையுடன் காவிரியை இணைத்துப் பார்த்து விட்டு, அன்பில் உருவாகிய புரட்சியாக மலைப்பிலிருந்து மீண்டாள்.

அல்லி நான் உன் கரைமீது அமர்ந்திருந்தாலும் உன்னோடையில் பிறந்தவள் தான். உன்மீது தவழ்ந்து சங்கமத்தில் கங்கையான உன்னைச் சந்திக்கிறேன். ஆனால், இப்போதும் உன்னைப் பார்க்கின்றேன் கண்ணெதிரே... ஆ!.. அதோ!.. அந்த பசுமையான வயலின் அந்தப் பக்கத்தில் நீங்காத அன்பாலே மலையாக நிற்கின்றாய் என்று எழுந்து மெதுவாக இயற்கையை ரசித்துக் கொண்டே நடக்கத் துவங்கினாள்.

அல்லி நடந்திட அவளின் அடிகளில் அன்றையப் பணிகள் மெல்லத் தொடர ஆரம்பித்தது. இவ்வளவு நேரம் எவ்வளவு இனிமையாகச் சென்றது என மகிழ்ச்சியுற்றாள். அல்லிக்கு அவள் நினைத்துப் பார்த்த பாட்டி கங்கம்மாவின் நீங்காத அன்பே இவ்வளவு இனிமையாக இருக்கும் பொழுது, இம்மாநிலத்தில் உள்ளோர் அனைவரும் அன்பைப் போற்றினால் எவ்வளவு இனிமையாக இருக்கும் என்று எண்ணிப் பார்த்தாள். தூய அன்பை வெளிக் கொணரவும், அதனால் அடையப் போகும் நன்மைகளை அடையவும், அளவுக்கு மீறிய சக்திகள் நம்மிடம் வேண்டும். எனவே, கங்கம்மா! நீ எப்படித்தான் எல்லாப் பணிகளையும் எளிமையாகச் செய்தாயோ! எங்கள் அனைவருக்கும் அந்தச் சக்தியைக் கொடுத்துவிடு என்று தேற்றிக் கொள்ள வேண்டினாள்.

-/ அகிலமணி ஸ்ரீவித்யா.

Monday, November 23, 2009

எல்லாம் உலோகமயம்!


அப்பெரிய பங்களாவில் காலை சுப்ரபாதம் ஒலிப்பதற்கு மாறாக இசை முழக்கம் அதிருகிறது. அங்கு, நாற்காலியில் அமர்ந்திருக்கும் ராஜகணபதி டேய்! சின்னப் பயலே அந்த ஒலியை கொஞ்சம் குறைச்சா என்னடா என்று முழக்கமிடுகிறார். ஆனால், அச்சிறுவன் அவரது பேச்சுக்களை சிறிதேனும் செவியில் வாங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை. அதே, நேரத்தில் வானொலியில் இன்றைய காலைச் செய்திகள்! வாசிப்பது சதாசிவம்; நாட்டின் மேன்மைக்காக இரு நாட்டுத் தூதுவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். அப்பேச்சு வார்த்தை நடைமுறைக்குச் சாத்தியம் ஆகாது என்றால் எங்கெங்கிலும் பதற்றமும், கலவரமும் மூளுவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அரசு தரப்பு நிலை உணர்த்துவதாக அறிவித்துக் கொண்டிருக்கிறார். அவ்வளவுதான், பெரியவருக்கு அவ்விசை முழக்கத்தால் செய்திகள் காதில் சரிவர விழவில்லை என்ற ஆத்திரம் வருகின்றது. அடே மூடா! உன்னை படிக்க வைப்பதும் போதும்; பாழாய்ப்போன கூச்சல் இசையைப் போட்டு நல்லதை கேட்க விடாமல் சதிராடுவதும் போதும் என்று சிறுவனை கையிலிருக்கும் தடியால் சரமாரியாக அடிக்கிறார். அவர் மனைவி ஓடிவந்து போதும்! நிறுத்துங்க பிள்ளைக்கு வலிக்கப் போகுது என்று மன்றாடவே எப்படியோ தொலைந்துக் குட்டிச் சுவரா போ! என்றவாறுத் தள்ளிச் செல்கிறார்.

அப்போது, ராஜகணபதியின் நண்பர் பூச்சிக்குட்டி என்ன அண்ணா காலை எழுந்ததுமே பையனோட பிரச்சனைக்கு நின்னுட்டியா என்று உள்ளே நுழைகிறார். வாடா! பூச்சு, நானும் பலமுறை காலையில நல்ல பாடல்களை போட்டுக் கேளுடா; உலக நடப்புகளை தெரிஞ்சுக்கோன்னு சொல்லிட்டேன். எங்கே கேக்கறான். எல்லாம் நாங்க செய்த தவம் என்றுப் புலம்புகிறார். அத்துடன், பூச்சுவின் மகள் அமெரிக்காவில் படிப்பை முடித்துவிட்டு வீட்டிற்குத் திரும்புவதால் விருந்துக்கு ஏற்பாடுச் செய்துள்ளதாக அழைக்கிறார்.


மறுநாள், சின்னப் பயலோடு தம்பதியினர் பூச்சுக்குட்டியின் வீட்டிற்குச் செல்கின்றனர். அங்கே, பல விருந்தினர்கள் முன்கூட்டியே வந்திருந்ததால் ஒரு ஓரமாக நின்று நடப்பதை களிப்புடன் பார்க்கின்றனர். அப்போது, பெரியவர் ஒருவர் எழுந்துநின்று தன் பேத்தி வழக்குரைஞர் கல்வியை வெற்றிகரமாக முடித்துவிட்டு தாய்நாட்டிற்கு வந்திருப்பதாக பெருமையுரைக்கிறார். உடனே, உறவினர்கள் அனைவரும் ஆமோதித்து வரவேற்பதாக கைத்தட்டிக் குரல் எழுப்ப சிற்பியின் சிலை போல ஜொலித்த பேத்தி நாணுகிறாள். இங்க பாரு! அமெரிக்காவில் படித்துத் திரும்பியவளுக்கு வெட்கம் கூட ஒட்டி வருகிறதே! என்று சிலர் சலசலக்கின்றனர். சிறிது நேரத்தில் கூடியுள்ளவர்களுக்கு ஓர் நற்செய்தி அறிவிக்கப் போவதாக பூச்சுக்குட்டி உறுதியளித்துவிட்டு வாயிலை நோக்கி விரைகிறார்.

அப்போது, வீட்டு வாயிலில் பெரிய நீலநிற கார் ஒன்று வந்து நிற்கிறது. அதிலிருந்து, இறங்கிய நண்பர்கள் என்ன ஆஹா! ஓஹோ என்று சொன்னியே அது இதுதானா! என்று கூறியவாறு உள்ளே நுழைகின்றனர். ஆயினும், ஒரு வாட்டம் சாட்டமான வாலிபன் பூச்சுக்குட்டியை வணங்கிக்கொண்டே நலம் விசாரிக்கிறான். அதை, எதிர்ப்பார்க்காத பூச்சுக்குட்டி மலைப்புடன் அவனை வரவேற்று உபசரிக்கிறார். அங்கு, வேடிக்கையும், கூத்தும் போட்டியிடுகின்றன. அதன், நடுவே தடபுடலான உணவுப் பரிமாற்றங்கள் சுவையை அதிகமாக்க சில மணித்துளிகள் அமைதி நிலவுகிறது. அந்த அமைதியை உபயோகித்த பூச்சுக்குட்டி எடுப்பான அவ்வாலிபனை மருமகனாக வரிக்க உள்ளதாக அறிவிக்கிறார். மேலும், அவன் அமெரிக்காவில் கணிணி வல்லுநராக வேலைச் செய்வதாக நலம் பாராட்டவே உறவினர்கள் கேள்விக் கணைகளை துளைக்கின்றனர்.

எப்படியோ ஒரு வழியாக வீட்டிற்கு வரவிருக்கும் மாப்பிள்ளையை திருப்திப்படுத்தியதாக பூச்சுக்குட்டி தம்பதியர் புன்னகை புரிகின்றனர். அத்துடன், ராஜகணபதியின் மகனுக்கு ஒரு விளையாட்டுக் கணிணியும் அன்பளிப்பாகக் கிடைத்துவிடுகின்றது. உடனே, அவர் மகன் சின்னப்பயலை பார்த்து குரங்கு கையிலே பூமாலை! என்று நொந்துக்கொள்கிறார். அவன், அந்தக் கணிணியை எப்படி பயன்படுத்தலாம் என்று ஆராயத் துவங்குகிறான். பின்பு, இருவரும் நடந்துமுடிந்த பூச்சுக்குட்டியின் மகள் நிச்சயதார்த்த நிகழ்ச்சிகளைக் குறித்துப் பேசியவாறு வீட்டிற்குத் திரும்புகின்றனர்.

அதிலிருந்து மூன்று மாதத்திற்குள் பூச்சுக்குட்டியின் மகள் வாடாமல்லியை அமெரிக்க மாப்பிள்ளை வசந்த ராஜா மணந்துக்கொள்கிறார். அட! ஏது நிச்சயதார்த்தமே எதிர்பாராமல் விருந்தளிப்பு என்ற பெயரில் தடபுடலாக நடந்தேறியிருக்க திருமணம் என்றால் அதிர்வேட்டு முழங்க ஏக உபசாரம்தான் என்று ராஜகணபதியின் மனைவி காதில் கிசுகிசுப்பது நன்கு கேட்கிறது. பிறகு, அவர்கள் குடும்பம் பிரிவுக்கண்ணீர் உதிர்க்க வாடாமல்லி வசந்தராஜாவுடன் விமானத்தில் பறப்பதற்குத் தயாராகிறார். அவ்வமயம், வசந்தராஜா அமெரிக்க மாப்பிள்ளை என்பதையும் தாண்டி ஒருபடி மேலாக தமிழ் மரபினைப் பின்பற்றி பூச்சுக்குட்டி தம்பதிகளை வணங்குகிறார். உடனே, அதைக் கவனித்த பூச்சுக்குட்டி, மாப்பிள்ளை இன்றைய பிரிவுக்கண்ணீருக்குப் பரிசாக நல்ல செய்தியை சீக்கிரம் சொல்லிட்டா எங்களுக்குத் திருப்தி என்று விடையளித்துப் பயணத்திற்கு கையை அசைக்கிறார். அந்த விமானம் நகர்ந்தது முதலாக இருவரும் நற்செய்தியைக் கேட்பதற்கு ஆவலாகக் காத்துக்கிடக்கின்றனர்.

அடே! பூச்சுக்குட்டி பேரப் பிள்ளைக்களைப் பார்க்க வேண்டுமானால் சில வருடமாவது ஆகாதா என்ன? என்று ராஜகணபதி அவ்வப்போது ஆறுதல் கூறுகிறார். ஆயினும், வருடங்கள் வேகமாக நகர்ந்தனவே ஒழிய குழந்தையின் குரலை அத்தம்பதியர் கேட்பதற்கு அதிர்ஷ்டம் வாய்க்கவில்லை.

பின்னர், ஒரு முறை அவர் மகள் வாடாமல்லி இந்தியாவுக்கு வரப்போவதாகச் சொன்னதால் நண்பன் ராஜகணபதியை தேடிச்சென்ற பூச்சுக்குட்டி அவர்கள் பங்களாவில் எவ்வித சப்தமுமின்றி அமைதியாக இருப்பதைப் பார்த்து எங்கே சின்னப்பயல் என்று வினவ அவன் முன்ன மாதிரி இல்லை! இப்ப இசை வட்டுக்களுக்குப் பதிலாக வாடமல்லி கொடுத்த விளையாட்டுக் கணிணியை வைத்துக்கொண்டு அலைகிறான். அத்துடன், உண்மையான கணியையும் வாங்கி உபயோகிக்க கத்துக்கிட்டான்! என்றுக் கேள்விப்படுகிறார். அங்கு, மேற்கொண்டு அமர்ந்திருப்பதற்கு விரும்பாத பூச்சுக்குட்டி ராஜகணபதி வந்தால் தன்னை வந்து பார்க்குமாறுச் சொல்லிவிட்டு வீட்டிற்குத் திரும்புகிறார். அங்கு, வழியில் சின்னப்பயல் நண்பர் குழுவுடன் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறார். அவன், தன் கையிலிருந்த பீடியை மறைத்துத் தூக்கி எறிந்துவிட்டு சிரிக்கவே தானும் குறுநகை புரிந்தவாறுத் தலையை தாழ்த்திக்கொள்கிறார்.

அவர் சிந்தனையில் ராஜகணபதியின் கம்பீரமானக் கண்டிப்பு நிழலாடுகிறது. இந்த ராஜகணபதிக்கு என்னவாயிற்று? முன்பு அடிக்கடி வீட்டிற்கு வந்துத் திகைக்க வைப்பான் இப்ப என்ன ஆயிற்றோ! என்று தோன்ற தான் எதிரில் சந்தித்த சின்னப்பயலின் உருவம் பெரிதாக இருப்பதையும் கூடியிருந்தச் செய்கைகளையும் அலசுகிறார். மேலும், தனக்குள் இவன் பெரியப்பயல் ஆகிவிட்டான் போலிருக்கு அதான்! ராஜகணபதிக்கு வாட்டம் வந்துவிட்டது என்று முணுமுணுத்துக் கொள்கிறார். அதே நேரத்தில் ராஜகணபதி வேலையிலிருந்துத் திரும்பவே டேய் பூச்சுக்குட்டி! என்று அழைத்தவாறு அருகில் வருகிறார். என்னதான் இருந்தாலும் பாசம் மாறுமோ! கட்டுப்பாடு சில நடவடிக்கைகளை தடுத்திருந்தாலும் இணைந்த உள்ளங்களுக்கு அழிவில்லை. அதனால், அந்த நண்பர்கள் வீதியில் சந்தித்துக்கொண்டாலும் கருத்துப் பரிமாற்றத்துக்கு உகந்த இடத்தைத் தேடுகின்றனர்.

பின்பு, அங்கிருந்த ஆலமரத்தின் நிழல் அவர்களை வரவேற்கச் சென்று அமருகின்றனர். அப்போது, நண்பன் ராஜகணபதி சின்னப்பயல் பெரியவனாக மாறி வீட்டிற்கு உதவுவதால் தான் சில பொறுப்புக்களை விட்டுவிட்டு மனைவியின் சொல்லுக்கு மகுடி ஊதுவதாக ஒத்துக்கொள்கிறார். மேலும், தன் மகன் இணையதளம் மூலமாக பலவற்றைக் கற்றுத்தேர்ந்து கைநிறைய சம்பாதிப்பதாகச் சொல்கிறார். அத்துடன், ராஜகணபதியின் பாசத்தோடு கூடியக் கண்டிப்பு விடுபட்டதால் நெறியாளனாக மாறும் திறம் குறைந்து ஏதோ நடப்பதாகவும் அவன் பேச்சுக்களில் மண் மூடிக்கிடப்பதாகவும் புலம்புகிறார்.

அதை, அமைதியோடு கேட்டுக்கொண்டிருந்த பூச்சுக்குட்டியும் ஏதோ வாய்வார்த்தைக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு தன் பெண்ணுக்கு குழந்தைப் பிறக்கவில்லை என்று கண்ணீர் வடிக்கிறார். அதற்கு என்னடா பூச்சுக்குட்டி இப்பத்தான் ஊருக்கு வரப்போறா இல்ல! நல்ல மருத்துவரிடம் காண்பித்து வழிகேட்டா சரியாப் போயிடும்! என்று ராஜகணபதி அரசமர கணபதியை போல பதிலளித்துத் தேற்றுகிறார். பிறகு, அன்றையப் பொழுது அவர்களுக்கு இனிமை அளித்துவிட்டதாக நினைத்த இருவரும் கரங்களை விலக்கிக்கொண்டு வெவ்வேறு திசைகளில் நடையினைத் தொடர்கின்றனர்.

அடடா! எழுத விட்டுப் போச்சே என்ன.. அறியாமை; தெளிந்த அறிவு ஆகிய இரண்டுமே கலங்கும்போது வேறு எதைத் தொடரப்போகிறேன். ஏதோ! ஒரு கை பார்த்துவிடலாம் வாங்க!. சந்து, பொந்து, சறுக்கல் என்று ஏதாவது ஒன்று கூடவா கிடைக்காது. அதில், புகுந்து அஞ்ஞானம், விஞ்ஞானம் இரண்டிற்கும் தீர்வுகளை அலசி விடலாம் என்று கதையின் தொடர்ச்சி மெல்ல இழைந்தோடத் துவங்குகிறது.

ஏ....! அழகியத் தீவே எனை மறந்துவிட்டாயோ! என்ற ஒலி எழுந்த திசையினில் பார்த்தால் நம்ம பூச்சுக்குட்டி சிரிப்போடு புதுமணத் தம்பதிகளை வரவேற்றுக்கொண்டிருக்கிறார். ஆமாம்! அவர் கண்களில் தன் பெண்ணை பார்த்த மகிழ்ச்சி தாண்டவமாடுகிறது. அதில், பல வருடங்களுக்கு முன் தன் பெண்ணும், மருமகனும் புதுமணத் தம்பதியராகக் காட்சியளித்ததைப் போன்றே இன்றும் இருப்பதால் ஏனோ வருத்தமும் தென்படுகிறது.

அதை அவர் வெளிக்காட்டாமல் பிரயாணம் எப்படி இருந்தது மாப்பிள்ளை... என்றவாறு மாறுதலாகப் பேசுகிறார். உடனே, வல்லுநர் வசந்தராஜா ஏன் கேக்கறீங்க மாமா! உங்கப் பொண்ணு வாடாமல்லியின் வாட்டம் எங்கோ காணாமப் போயிடுச்சு! என்று கூறிக்கொண்டே புன்னகை புரிகிறான். அன்று முழுவதும் அவர்கள் சாப்பிடுவதும், துவைப்பதும் தவிர வேறு எந்த விஷயங்களையும் பகிர்ந்துக்கொண்டதாகத் தெரியவில்லை. மறுநாள், விடியலில் வாடாமல்லி தன் தாயின் மடியில் மேல் குழந்தையைப் போல படுத்துக்கொண்டு குறைகளை முறையிடுகிறாள். அம்மா! நானும் அவரும் சந்தோஷமாகத் தான் இருக்கிறோம் என்றாலும் மழலை மொழியை கேட்க முடியவில்லையே! என்று குமுறுகிறாள். அப்போது, பூச்சுக்குட்டியின் மனைவி ஏதாவது மறைக்காம உள்ளதைச் சொன்னால் பலனை தேடலாம் என்று ஆறுதல் கூறவே அவர்கள் சில வருடங்களுக்கு குழந்தைப் பிறக்காமல் இருப்பதற்காக உபயோகித்த முறைகள் அனைத்தையும் ஒவ்வொன்றாகச் சொல்கிறாள். பிறகு, அவர்கள் இறைவன் இருக்கிறான் எல்லாம் சாதகமாக அமைந்திடும்! என்று நம்பிக்கை மொழியைக் கூறுகின்றனர்.

அதன்படி, அறியாத சில விஷயங்களை அறிந்துக்கொண்ட பூச்சுக்குட்டி தம்பதியர் என்னதான்! சொத்து சுகம் என்று கணித்து வழக்குகளில் வாதாடிச் சேர்த்துவைத்தாலும் காலத்தை வீணாக்கி விட்டனரே! என்று கவலையுற்றுச் சிறந்த மருத்துவரிடம் பரிசோதனைக்காக அழைத்துச் செல்கின்றனர். அவர், நன்கு பரிசோதித்துவிட்டு பல வைத்திய முறைகளைக் கையாளுமாறுப் பரிந்துரைக்கிறார். அதனால், அவர்கள் நிரந்தரமாக பெரியவர்களுடனேயே வசிக்கத் துவங்குகின்றனர். அப்போது, விஞ்ஞான யுகத்தை அளந்துப் பருகியிருந்த வாடாமல்லிக்கு நம்பிக்கையும் வசந்த ராஜாவுக்கு துணிவும் பிறக்கின்றன. சாதாரண, வாழ்க்கையில் இறங்குகின்ற அவர்கள் ஒவ்வொரு கோவிலாக தரிசனம் செய்து வந்தாலும் கைமேல் எவ்வித பலனும் கிடைக்காமல் வருந்தியழுகின்றனர். பின்னர், அவர்கள் ஏதோ ஒரு முடிவுக்கு வந்தவர்களாக பனிமலை நோக்கிப் பயணம் மேற்கொள்ள பெரியவர்களையும் தங்களுடன் வருமாறு அழைக்கின்றனர்.

அதனால், பூச்சுக்குட்டி நண்பன் ராஜகணபதிக்கு விஷயத்தைத் தெரிவிப்பதற்காக அவன் வீட்டிற்குச் செல்கிறார். அங்கே, நிலவிய நிசப்தம் அவர் அடிவயிற்றை கலக்குகிறது. ஆனாலும், சின்னப்பயலே! சின்னப்பயலே! என்று குரல் எழுப்புகிறார். அப்போது, எட்டிப் பார்த்த ராஜகணபதி மெல்லிய போர்வை ஒன்றை உடலில் சுற்றிப் பிடித்தபடி வாடா! பூச்சுக்குட்டி என்று வரவேற்க உள்ளே சென்று அமர்கிறார். உடம்புக்கு! என்னடா நல்லா மெலிஞ்சுட்டியே என்று பூச்சு விசாரிக்கையில் அதற்கு எந்த குறைவுமில்லை! பாழாய்ப்போன மனதில்தான் எல்லா வேதனையும் வந்து இறங்கி விடுகிறதே! என்று பதிலளிக்கவே வியக்கிறார்.


மேலும், ராஜகணபதி தன் மகன் அறியாத சிறிவனாக இருந்தப்போது கண்டிப்புடன் நடந்துக்கொண்டதையும் தற்போது அதை கைவிட்டு விட்டதால் பெரியவனான சின்னப்பயல் குடித்துக் கும்மாளமிட்டுச் சில்லறைகளுடன் சேர்ந்து ஊர்சுற்றிச் சீரழிந்து வருவதையும் கூறுகிறார். அத்துடன், அவன் எவ்வித நற்செயல்களையும் போற்றாமல் சம்பாதிக்கும் ஆணவத்தில் எடுத்தெறிந்து எக்காளமாகப் பேசுகிறான் என்றுச் சொல்லிப் புலம்புகிறார். அவன் இரவில் வருகின்ற நிலையியும் பகலில் போகின்றப் போக்கும்; டாடி மம்மி வீட்டில் இல்ல என்ற கூத்தும் கவனித்துப் பார்த்தால் உயிருடன் இருக்கவே பிடிக்கவில்லை என்று வேதனையைக் கொட்டித் தீர்க்கவே நீயும் வாடா என்னுடன்! என்று பூச்சுக்குட்டி பனிமலை விஷயத்தைக் கூறி அழைப்பு விடுக்கிறார்.

அம்மம்மா! அறியாமை கற்றுக்கொண்டது வெறும் விளையாட்டுக் கணிணி என்று நினைத்தது தவறாக ஆயிட்டுதே! அவன் அதே கணிணிக் கல்வியை நிஜமாகப் பயின்றபோது அறியாமை அறிவுடைமை ஆகின்றது என்று அல்லவா தோன்றிற்று. அது எப்படி இவ்வளவு விபரீதமா போச்சு! இது என்ன பெரிய பிசாத்து! கணிணியில் எத்தனையோ புதுமைகள் பொதிந்திருக்கின்றன. அதில், வெறும் கணக்கு மட்டுமா எத்தனை இணைப்புத் தளங்கள்! அது நன்மையும், தீமையும் உள்ளடக்கியது என்று பலரும் அறிந்ததுதானே! இந்தச் சின்னப்பயலுக்கு இரண்டாவதாக உள்ள தீமை மட்டும் எப்படி எளிதாகத் தொற்றிக்கொண்டதோ தெரியவில்லை என்று பூச்சுக்குட்டி முணுமுணுக்கிறார். அவரிடம் இருந்த கைத்தொல்(லை)பேசி ஆர்ப்பாட்டமாக ஒலிக்கிறது.

அதை எடுத்ததும், அவர் மனைவி என்னங்க! வரும் வழியில் ரெடிமேட் உப்புமா கலவையும், குழம்புக் கறிப் பொவுடரும் வாங்கிட்டு வாங்க! என்றுக் கட்டளையிடத் தலையசைக்கிறார். அவருக்கு என்ன மாற்றமோ தெரியவில்லை பெண்கள் தானாகச் சமைக்க வேண்டியதைக் கூட கலவையாக வாங்கிக் கொதிக்க வைத்து விடுகிறார்கள் என்று எண்ணிக்கொள்கிறார். பின்பு, அவர்கள் பயணத்திற்குத் தேவையானவற்றை வாங்குவதுடன் மனைவியின் மந்திர மொழிக்கு உரியதையும் சேர்த்து வாங்கிக்கொண்டு அவற்றையே உற்று நோக்கியவாறு வீட்டிற்குள் நுழைகிறார்.

கால நேரத்திற்கென்ன! கேட்கவா வேண்டும் பயணம் மேற்கொள்ளும் நாளும் வருகின்றது. எங்கு சென்றாலும், வெறும் கையில் செல்ல முடியுமா! அதற்கு உகந்த பொருள்களுடன் பல செயற்கை இலகு இயந்திரச் சாமான்களை எடுத்துச் சென்றால் தானே மதிப்பு. அதுவும் தயாராகியது. வாராய்! நீ வாராய்! போகும் இடம் வெகுத் தூரமில்லை; போகும் பாதை நான் அறியேன்; போனவன்தான் திரும்பி வருகிறான் என்றுப் பல பாடல்கள் முழங்க பனிமலைக்குக் குழுவாகச் செல்கின்றனர். அங்கு, எத்திசை நோக்கிலும் சக்தியடா! என்பதைப் போல வெண்மையான துகள்களுடன் சில்லென்றுக் காற்று வீசுகிறது. முதலில், அவர்கள் தங்குவதற்கான வசதிகளைச் செய்துக்கொண்டு சாமியாரைப் பார்ப்பதற்கு எவ்வாறு செல்ல வேண்டும் என்று விசாரித்து அறிகின்றனர். அத்துடன், வழிகாட்டி ஒருவரின் உதவியுடன் பனிமலை உச்சிக்குச் செல்கின்றனர்.

என்ன! அந்தச் சாமியார் இருப்பதாகவே தோன்றவில்லை. அந்த வழிகாட்டி நபரும் சிறிது மேலே செல்லுங்கள் என்றுச் சொல்லிவிட்டு எங்கோ செல்கிறான் என்று விழிக்கின்றனர். ஆயினும், என்ன செய்வது! அஞ்ஞானம், விஞ்ஞானம் என்ற இரண்டு நிலைகளுமே மெய்ஞானத்தை அல்லவா தேடிவந்துச் சேர்கிறது. எத்தடையானாலும் குறுக்கிடாமல் அகன்றால் நல்லதுதான் என்று நினைத்துக்கொள்கின்றனர். ஆஹா! மக்கள் சக்தி! மாபெரும் சக்தி! அங்கிருந்தக் கூட்டத்தைப் பார்த்தால் அதுதான் சாமியாரின் இருப்பிடம் என்பதுப் புலனாகிறது. வாருங்கள்! இன்னும் சிறிது தூரம்தான் என்று அடிகளைப் பதித்துச் செல்கின்றனர். அங்குள்ள, கூட்டம் ஏதோ மந்திரங்கள் ஜெபிப்பதைப் போன்று வாய் அசைத்தாலும் அது விகற்பமாக அல்லவா இருக்கிறது என்று எட்டிப் பார்க்கின்றனர். அங்கு, பனிமலை உச்சி தென்படவில்லை; அதற்கு மாறாக பனிப்பாறையின் பின்புறம் நகர்ந்துச் செல்லும் தரை மட்டுமே தென்படுகிறது.

அவ்வமயம், பக்தகோடிகள் திகைக்கும்படி ஏதோவொரு உருவம் மங்கலாகத் தோன்றுகிறது. மேலும், அதிலிருந்து அன்பார்ந்த பக்தகோடிகளே! இப்புவிமேல் நன்மை, தீமை என்று அறியாது பல இயந்திர சக்திகள் செயல்படுவதால் சாமியார் அதை அறிந்து வருவதற்காகப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கு எத்துணை வருடங்கள் ஆகுமென்பதுத் தெரியாததால் சிஷ்யனாகிய என்னிடம் அவர் வரும்வரை பக்தகோடிகளுக்கு இச்செய்தியை அறிவிக்கும் பணியை ஒப்படைத்துள்ளார் என்ற முழக்கம் ஒலிக்கவே அனைவரும் தலைதாழ்த்தி வணங்குகின்றனர். ஐயகோ! பின்பு, அஞ்ஞானம், விஞ்ஞானம் மற்றும் மெய்ஞானம் என்ற யாவுமே கலந்து என்னுள் அடங்கு! உன்னுள் அடங்கு! தன்னுள் அடங்கு! என்றுச் சுழல அங்கிருந்த மக்கள் யாவரும் எல்லாம் உலோகமயம்! என்றுப் புலம்பியவாறுத் திரும்புகின்றனர். அப்போது பனிமலையில் வசிக்கும் ஆண்டியொருவன் பழையக் குருடி! கதவைத் திறந்திடுடி! என்று பாடிக்கொண்டே நடந்துச் செல்கிறான்.

- அகிலமணி ஸ்ரீவித்யா.















Friday, November 20, 2009

தமிழ் பேச வா!

தமிழ் பேச துணிந்து வா!
தாய் மொழியை வளர்க்க வா!
தரணியை காக்க வா!

(அமுது. அமுது.. அமுது...
தமிழ் அமுது. அமுது.. அமுது...)

பல்லவி

எழுத்தினை பயில வா!
ஏக்கங்கள் அகற்ற வா!
ஏட்டினை காப்போம் வா!
ஏணியாய் வளர்வோம் வா! (தமிழ்)

அனுபல்லவி

காப்பியம் இயற்ற வா!
கற்பனை நிலவில் வா!
சரித்திரம் படைப்போம் வா!
சங்கமாய் முழங்க வா! (தமிழ்)

-அகிலமணி ஸ்ரீவித்யா

நிழல் தேடும் மரங்கள்!

பரந்த உலகில் படர்ந்திருக்கும் மரங்கள்
பசுமை மாறாத நினைவுகளே நிழல்கள்!
நிலையான மரத்தில் கிளைகள் படர்ந்திருக்கு
நெடுநெடு வளர்ச்சியில் உண்மைகள் புதைந்திருக்கு!

முதிர்ந்த நெஞ்சத்தில் மின்சாரம் பாய்ந்திருக்கு
மின்வெட்டு வரும்போது பயனாகத் தானிருக்கு!
தடுக்கி விழும்போது தாயின் அரவணைப்பு
தளிர்கள் முதிரவே துணையாகும் நினைவு!

ஊர்க்கோடி மூலையில் பெற்றோர் காப்பகம்
உயிரணுக்கள் உலையினில் உல்லாச நினைவகம்!
தோளில் சுமந்து சுகமாகவே வளர்த்தேன்
சொந்தங்கள் கூடவே துணிவாகச் சேர்த்தான்!

கவலைகள் தீர்வதற்கு சொத்துகள் சேர்த்தேன்
காணாத காரணத்தால் சுகங்களைத் துறந்தேன்!
ஆசையும் ஆஸ்தியும் தன்னிடம் இருக்கு
ஆதரவு இல்லாமல் அனைத்திலும் வெறுப்பு!

மன்றாடி பேசுவது மனைவிக்குப் பொறுப்பு
மாதவன் செல்வத்துக்கு கடனாளி விரிப்பு!
திருமணம் ஆனதும் சுகமன்றோ போச்சு
திருந்தக் காத்திருகேன் காலமும் போச்சு!

படிப்பிற்கு வேலைகள் பாரினில் இருக்கு
பழியாமல் போனாலே குடும்பத்தில் இனிப்பு!
பசியாற என்னிடம் இருக்குதே உழைப்பு
பாதியை இழக்காமல் சேர்த்தாலே குவிப்பு!

அப்பப்பா போதுமே பெண்டிரின் பொல்லாப்பு
அத்தனையும் கொடுத்தாலும் பட்டினித்தான் இருப்பு!
தொலைவிருந்து நாள்தோறும் நான்பட்ட பாடு
தெரியாது சொன்னாலும் இவள்ராகம் பெரும்பாடு!

சுற்றங்கள் நீங்கியும் சுமைதானே சுமந்தேன்
சளிப்பாக இருக்குதே அருகாமை புகுந்தேன்!
சொல்லாம பிள்ளைக்கு செல்லமும் கொடுத்தா
சீர்கெட்ட பிள்ளைக்கு செல்வங்கள் தானளித்தா!

ஆடவர் நிலையும் அன்றாடம் தேயுது
அவரவர் தொல்லைகள் திசையெங்கும் பெருகுது!
இருவரும் சமமே விவாதம் வேண்டாம்
இன்பமாய் வாழ்வதற்கு சன்மானம் வேண்டாம்!

பிள்ளைகள் வளர்ச்சிக்கு நெடுந்தூரம் இல்லை
பாட்டாளி சேர்க்கிறான் அலங்காரப் பொருளை!
சடுதியில் முன்வரும் திட்டங்கள் இருக்கு
சேமிக்கும் ஓட்டத்தில் வருமானக் கணக்கு!

வசதிகள் பெருகவே உறவுகள் முறிவு
வண்டிகள் நூறு வேகத்தில் பிரிவு!
விபத்துகள் வாழ்த்தவே ஓடிடும் காலம்!
வாரிசுகள் தாங்குமா நீடித்த ஓலம்!

இயற்கை ஓட்டமே சீரான வாழ்வு
இல்லாத செயற்கை சீரழிக்கும் செலவு!
எண்ணச் சிறகுகள் நிழல்களின் கூடு!
எவ்வழியும் தேடிடும் மரங்களடர்ந்த காடு!!!!


- அகிலமணி ஸ்ரீவித்யா. 11/10/2009.

திருவையாற்றில்!

சந்ததிகள் தந்தருளும் வையாற்றில்
சங்கீத மூர்த்திக்கு அபிடேகம்!
பலகோடி பக்தர்கள் கூடாரம்
பன்னிசைப் பாடல்கள் அலங்காரம்!
எத்திசை நோக்கிலும் ரீங்காரம்
எவரவரோ கோர்த்திடும் பூவாரம்!
இச்சகம் தளைக்கவே சாரீரம்
இன்னிசை மழையில் சங்கீதம்
திருநின்று அருளும் பாவாரம்
தியாகய்யர் பிரமோற்சவம் திருவையோரம்!!

Saturday, October 3, 2009

வேண்டும் சுதந்திரம் எங்கும்!

ஆணும் பெண்ணும் வேண்டிடும் வேதம்
அன்றும் இன்றும் இசைத்திடும் கீதம்!
அளந்தோர் நெஞ்சம் முழங்கிடும் எல்லையில்
அன்றைய கணைக்குக் கிடைத்திடும் ஔடதம்!
பாற்கடல் அமிர்தம் பாரினில் தோன்றுமோ
பாவம் புண்ணியம் கூடினால் தெரிந்திடும்!
புத்தர் இயேசு காந்தி மூவரும்
புகட்டாத போதனைகள் புகைந்திடும் காலமிது!
எங்கெங்கு காணினும் மாயச் சக்தியடா
எழிலை மாய்திடும் யுத்த பூமியடா!
சொல்லினில் சுத்தம் மறைந்துப் போனதடா
சொல்லாத கதைகள் எழுந்து நடமாடுதடா!
அறிவுடைக் கண்கள் அழுது மூடுதடா
ஆர்வக் கரங்கள் உயர்ந்து வீழுதடா!
திறமைகள் ஒலித்து ஒளிர்ந்திடும் முன்னே
தோல்விக் குண்டுகள் வெடித்துச் சிதறுதடா!
காப்பியர் வகுத்த கலங்கரைக் காப்பியமும்
காகித நோட்டினுள் பதிந்துச் சுற்றுதடா!
மதியும் மந்திரமும் மண்ணில் புதைவதால்
மயக்கமும் குழப்பமும் மலிந்து வாட்டுதடா!
உழைப்பும் உண்மையும் உடைந்து ஏகுவதால்
உல்லாசக் கலன்கள் ஊரெங்கும் மிதக்குதடா!
பாதியுடை பழக்க மாற்றம் உழல்வதாலே
பழமை போற்றும் பண்புக்கு வேணுமடா!
எங்கும் எதிலும் சுதந்திரம் போதுமடா
என்றும் அழியா சுதந்திரம் நேர்மையடா!
இதுவே தாரக மந்திரமாம் எங்கும்
வேண்டும் சுதந்திரமாம்! வந்தே மாதரம்!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!