Saturday, October 3, 2009

வேண்டும் சுதந்திரம் எங்கும்!

ஆணும் பெண்ணும் வேண்டிடும் வேதம்
அன்றும் இன்றும் இசைத்திடும் கீதம்!
அளந்தோர் நெஞ்சம் முழங்கிடும் எல்லையில்
அன்றைய கணைக்குக் கிடைத்திடும் ஔடதம்!
பாற்கடல் அமிர்தம் பாரினில் தோன்றுமோ
பாவம் புண்ணியம் கூடினால் தெரிந்திடும்!
புத்தர் இயேசு காந்தி மூவரும்
புகட்டாத போதனைகள் புகைந்திடும் காலமிது!
எங்கெங்கு காணினும் மாயச் சக்தியடா
எழிலை மாய்திடும் யுத்த பூமியடா!
சொல்லினில் சுத்தம் மறைந்துப் போனதடா
சொல்லாத கதைகள் எழுந்து நடமாடுதடா!
அறிவுடைக் கண்கள் அழுது மூடுதடா
ஆர்வக் கரங்கள் உயர்ந்து வீழுதடா!
திறமைகள் ஒலித்து ஒளிர்ந்திடும் முன்னே
தோல்விக் குண்டுகள் வெடித்துச் சிதறுதடா!
காப்பியர் வகுத்த கலங்கரைக் காப்பியமும்
காகித நோட்டினுள் பதிந்துச் சுற்றுதடா!
மதியும் மந்திரமும் மண்ணில் புதைவதால்
மயக்கமும் குழப்பமும் மலிந்து வாட்டுதடா!
உழைப்பும் உண்மையும் உடைந்து ஏகுவதால்
உல்லாசக் கலன்கள் ஊரெங்கும் மிதக்குதடா!
பாதியுடை பழக்க மாற்றம் உழல்வதாலே
பழமை போற்றும் பண்புக்கு வேணுமடா!
எங்கும் எதிலும் சுதந்திரம் போதுமடா
என்றும் அழியா சுதந்திரம் நேர்மையடா!
இதுவே தாரக மந்திரமாம் எங்கும்
வேண்டும் சுதந்திரமாம்! வந்தே மாதரம்!
வந்தே மாதரம்! வந்தே மாதரம்!