Friday, December 11, 2009

'தமிழ்ச் செம்மொழி'

தமிழனாக நில்லடா
தலை நிமிர்ந்துச் சொல்லடா!
எட்டுத் திக்குகள்
எங்கும் நிலைப்பது வேதமடா!
அன்னை அறங்கள்
அறிவுத் திறன்கள் ஓங்குதடா!
உலகத் தமிழர்
உண்மை நெஞ்சம் போற்றுதடா!
தமிழ்ச் செம்மொழி
செவியில் இன்பம் பாயுதடா!
இளந்திரை முதுநரை
இளையர் இயக்கம் ஆளுமடா!
எல்லை இல்லை
எதிலும் சாதனை கூடுதடா!
கற்றவர் மற்றவர்
கலந்தக் கரங்கள் எழுதுமடா!
பாரதி கனவுகள்
பண்பு நெறியைப் புகழுதடா!
வந்தே மாதரம்
வாழும் தமிழர் முழக்கமடா!
அறம் பொருள்
அருள் யாவும் வேணுமடா!
ஒன்றே சத்தியம்
ஒருமித்த தமிழ்மொழி ஆகுதடா!
நாடுகள் வட்டம்
நாளும் வாழ்த்திக் கூறுமடா!
எழில் மொழிக்கு
ஏழுலகு ஆசிகள் உறுதியடா!
மாத்தமிழ் மரபு
மலர்ச்சி அடைந்து வெல்லுமடா!
கலைஞர் உள்ளம்
கனிந்துப் பாக்கள் இயற்றுதடா!
இலக்கியப் புதுமை
இதயம் நுழைந்துத் துலக்குதடா!
செம்மொழி செம்மொழி
சிறப்புகள் தமிழை வணங்குதடா!!!!

Wednesday, December 9, 2009

டிசம்பர் பூக்கள்!

குத்து விளக்கேற்ற புதுமனை புகுந்தாள்
குலமகள் நடையினைக் குறிப்பாக இசைத்தாள்!
அத்தான் சகோதர முறைகளை அறிந்தாள்
அத்தை மந்திரக் கட்டுப்பாடு பயின்றாள்!
துடிப்புடன் முதலாம் திங்கள் கடந்தாள்
துணைவன் தங்கைக்கு திருமணம் முடித்தாள்!
இரட்டிப்பு மகிழ்ச்சி கருணைப் பூண்டாள்
இல்லறம் சிறக்க நல்லறம் புரிந்தாள்!
சிப்பிக்குள் சுமந்த நல்முத்தை நுகர்ந்தாள்
சிலிர்த்து மல்லிகைப் பூச்சூடி முடிந்தாள்!
நல்லவன் தம்பிக்கு பணிவிடை செய்தாள்
நம்பிக்கை புகட்டி வேலையில் சேர்த்தாள்!
ஐந்தாம் திங்கள் அமுதம் சமைத்தாள்
அவர்குலச் சுற்றத்தார் புடைசூழச் சென்றாள்!
அய்யனார் கோவிலில் வழிபட்டு நின்றாள்
அறவோர் வாழ்த்த ஆசிகள் பெற்றாள்!
ஆல்போல் தளைத்த குடும்பம் என்றாள்
அறுசுவை அனைத்தும் சுவைத்து மகிழ்ந்தாள்!
ஏழாம் திங்கள் வளைகாப்பு ஏற்றாள்
எழில் மங்கை இடைசுமந்து வளைந்தாள்!
கடமை கண்ணியம் பரிபூரணம் அணிந்தாள்
குழந்தைப் பேறுக்கு தாய்வீடு நுழைந்தாள்!
புதுமணப் பெருமை புகழோடு திகழ்ந்தாள்
பதமறிந்து நவரசப் பாக்களைத் தொடுத்தாள்!
பத்தாம் திங்களில் பச்சிலை உண்டாள்
பச்சிளங் கொழுந்தைப் பெற்றெடுத்து பூரித்தாள்!
குறிச்சி மலர் பெயரிட்டு அழைத்தாள்
குளிர்ந்த மனதோடு புக்ககம் வந்தாள்!
வருடம் நகர்ந்த விதத்தை நினைத்தாள்!
வருடி அழைத்தப் பூக்கரம் தழுவினாள்!

Saturday, December 5, 2009

கூகிள் வலைப்பதிவு!

ஊடகங்கள் வியாபாரமாக
உண்மைகள் ஊசலாடின!
படைப்புகள் மதிப்பிழந்து
பக்கங்கள் விலைபோயின!
உருவாக்கும் குழுமத்தின்
உதிரநீர் திடமாயின!
வடுக்கள் பதியாமல்
வலைப்பதிவுத் தளமாயின!
தனித்தோர் குறிப்புகள்
தமிழில் பதிவாயின!
எளியோர் பயனுற
எழுத்துகள் இலவசமாயின!
சொடுக்கும் நொடியில்
சாதனைக் கூற்றாயின!
பல்லூடகத் தகவல்
பாதுகாப்புப் பகுதியாயின!
படங்கள் பதில்கள்
பாரோர் தொடர்பாயின!
ஜனநாயக முறையே
சரிநிகர் வலுவாயின!
தகுதியும் தரமும்
தகைமைப் படைப்பாயின!
கூகிள் நம்பகம்
குறைவிலா சேவையாயின!!!!

Tuesday, December 1, 2009

கடற்கரை!

கடற்கரை ஓரத்தில் கலங்கரை விளக்கம்
காலாற நடந்தோரின் கவிபாடுது!
மற்கோட்டை கட்டியச் சிறுபிராயம் முதலாக
மதிமயங்கி தோற்றோரின் நிழல்காட்டுது!
சிந்தனைச் சிற்பிகள் வடித்தக் கதைகளை
சிந்தாமல் சிதறாமல் குறிகாட்டுது!
ராகமும் தாளமும் கலந்த நாட்களில்
ரகசியம் பேசிய விதங்காட்டுது!
பட்டொளி வீச்சில் பயிற்சிகள் செய்து
பல்லவன் வடித்த எழில்காட்டுது!
நிலவொளி வட்டிலில் நிலாச்சோறு உண்ட
நெடுங்கால நினைவினை அகங்காட்டுது!
கடலோரப் பாறையில் சுனாமிச் சுரங்கம்
கண்ணெதிர்ச் சோகத்தைப் புறங்காட்டுது!
சிறுகூடல் சிறுவூடல் உணர்ச்சிப் புதையலை
சில்லிடும் கடற்காற்று நிறங்காட்டுது!
தளிர்கொடி இடையாள் துயரால் மெலிந்து
துணிவுடன் வீழ்ந்த இடங்காட்டுது!
தாடி மன்னர்கள் குவளை ஏந்தி
தன்னலம் குன்றிடும் நலங்காட்டுது!
கடற்கரை ஓரம் சிங்க ராஜா
கம்பீரம் காட்டிச் சிரிக்கும் ஒளிகாட்டுது!
கவிச்சோலை அரங்கில் கூடலூர் கவியொலி
கடற்கரைக் காட்சியின் புகழ்காட்டுது!!!!!!

கங்கம்மா


அழகான பச்சைப் பசேலென்ற வயல்வெளி. அதன் பசுமை அனைவரையும் தன்னருகே கவர்ந்திழுத்தது. அதன் ஒரு பக்கத்தில் மலை அடிவாரமும், மற்றோர் பக்கத்தில் நதிக்கரையையும் அமைந்திருந்தது. அதன் அழகை ரசித்த பெண்ணொருத்தி, தன்னை மறந்து அதன் அருகே நடந்து சென்றாள். நதியின் நீரலை அவள் கால்களில் பட்டதும், அதன் குளிர்ச்சியில் மயங்கிக் கரையோரமாகச் சென்று அமர்ந்து கொண்டாள். அவ்வேளையில் அவளின் நினைவுகள் தன்னிச்சையாக எங்கோயோ பயணிக்கத் துவங்கின. அல்லியின் விழிகள் அன்பைத் தேடின.

அல்லி... அல்லி எழுந்திரு. எவ்வளவு நேரமாயிருச்சு. பார்த்தியா கடிகாரத்தை. எவ்வளவு முறை கூப்பிட்டாலும் காது கேட்காதே. உங்க டீச்சர் கிட்ட தான் சொல்லணும். இனிமே பள்ளிக்கு லேட்டாப் போனே என்றவாறு பாட்டி கங்கா அறையினுள்ளே நுழைந்தாள். சரி, சரி! உங்கப்பா குரல் உரக்க வர்றதுக்கு முன்னால போய் குளித்து விட்டு சாப்பிட வா என்றழைத்தாள். கண் விழித்த அல்லி, பாட்டி உன்னைப் பார்த்துக் கொண்டே எந்திரிச்சா குஷியா இருக்கும் என்று சொல்லியவாறு, பாட்டியின் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்தாள். பின்பு சந்தோஷத்தில் குதித்துக் கொண்டே குளிக்கச் சென்றாள். அவள் திரும்பி வருவதற்குள்ளாக, பாட்டி படுக்கைகளைச் சரி செய்து விட்டு, மகனுக்கு வேண்டிய டிபன் பாக்சை எடுத்து அலுவலகப் பையினுள் வைத்தாள்.

அத்தே! அத்தே என்ற மருமகள் நர்மதா இன்னிக்கு சாயந்தரம் லேட் ஆயிடும், அதனாலே இன்னிக்கு இரவு நீங்களே வேண்டிய ஆகாரத்தை தயார் செய்திடுங்க என்றாள். தலையாட்டிய பாட்டியின் முன்பாக அல்லி, அமராவதி மற்றும் சரஸ்வதி மூவரும் வந்து நின்றனர். பாட்டி சலித்துக் கொள்ளாமல் பேத்திகளை நோக்கி, இன்னிக்கு என்ன கைக்கடியா இல்லை டிபன் தட்டா என்று அவர்களின் விருப்பத்தைக் கேட்டாள். மூவரும் ஓரப்பார்வை பார்த்து விட்டு கையில் சாப்பாடு பிசைந்து போட்டிடு பாட்டி என்று வரிசையாக அமர்ந்தனர். பாட்டி பிசைந்து கைகளில் இட்ட வற்றல் குழம்பு சாதம் கமகம என்று மூக்கைத் துளைக்க மூவரும் மாறி மாறி கைகளை நீட்டினர். அவர்களின் இடது கைகளில் வைத்திருந்த சுட்ட அப்பளமும், அதனுடன் லபக்கென்று வாயினுள் நழுவிச் சென்றது. கடிகாரம் துள்ளி ஓட, மூவரும் பள்ளிக்குக் கிளம்பிச் சென்றனர்.

அம்மா... அம்மா என்றவாறு காவேரி அக்கா உள்ளே நுழைந்தாள். வாம்மா.. என்று பாட்டி அவளை உள்ளே அழைத்தாள். மாப்பிள்ளை வரலை என்று விசாரித்த பாட்டியிடம், மாலையில் வருவார் எனக் கூறிக்கொண்டே நாற்காலியில் சென்று அமர்ந்து கொண்டாள். பாட்டி அவளருந்தக் காப்பியைக் கொடுத்தாள். பாட்டி, தனது மூத்த பேத்தி காவேரி தாய்மை அடைந்திருப்பதால் மகிழ்ந்து, அவளிடம் எந்த வேலையையும் கொடுக்காமல், நல்ல கருத்துள்ள பக்திக் கதைகளை அவ்வப்போது கூறுவாள். மேலும், அவளின் உடல் நலத்தைக் கவனித்து அவளுக்குத் தக்கவாறு ஆறுதலாக பதிலளிப்பாள். அன்றைய தினம் அவள் தனக்கு உடல் வலியாக இருக்கிறது என்று கூற, இன்னும் என்ன ஆறு மாதங்களில் குட்டிக் கண்ணன் பிறந்திடுவான் தாங்கிக்கோ என்றவாறு பதிலளித்து விட்டு, ஓய்வெடுக்குமாறு கூறினாள். பிறகு, பாட்டி தான் ஊறப் போட்ட துணிகளைத் துவைத்து விட்டு, மாவு அரைக்கிறேன் எனக் கூறிக்கொண்டே, மீண்டும் சமையல் அறையினுள் நுழைந்தாள். உறங்கச் சென்ற காவேரி பாட்டி நீ முதல்ல சாமியைக் கும்பிட்டு விட்டுச் சாப்பிடு என்றாள். வீட்டிலிருந்து சிட்டாகப் பறந்துச் சென்ற உறவுகள் வருவற்குள்ளாக வேலையை முடிக்கத் தாயாராகிய பாட்டி எப்போது ஓய்வெடுத்தாள். தெரியவில்லை..

ஓடிய கடிகார முள் வேகமாய்க் காட்டியது மாலையின் பிறப்பை. அம்மா... பால் என்றவாறு குரலொளிக்க இந்தா வர்றேன் என்றவாறு பாட்டி வெளியே வந்தாள். பாட்டியம்மா உங்க பேத்தி கீழ விழுந்திருச்சாம். அந்த பாக்கியம் டீச்சரம்மா தான் சொன்னாங்க. ஸ்கூல்ல இருந்து வந்தாக்க ஏதாவது சுத்தி கித்தி போடுங்க என்றாள். எந்தப் பேத்தி எனக் கேட்காமல் விட்டுட்டோமே என்று தனியாகப் புலம்பினாள். சற்று நேரத்தில், பாட்டி.. என்ற குரல் கேட்டு என்னடி குட்டிகளா யார் கீழ விழுந்தீங்க? என்று கேட்டுக் கொண்டே வெளியில் வந்தாள்.
பாட்டி.. பாட்டி இவ தான் என்று சரசுவின் பக்கம் பார்க்க, அடிக் குழந்தே! அடி ரொம்ப பலமா பட்டிடுச்சா என்றாள். இல்லை பாட்டி, என்னுடன் படிக்கிற வகுப்பு மாணவி தான் என்னை விளையாடும் போது தள்ளி விட்டாள் எனக் கொஞ்சியவாறு கூறினாள். உடனடியாக அவளை உட்கார வைத்து காயத்திற்கு மருந்துத் தடவி, உப்பைச் சுற்றிப் போட்டாள். காயத்தின் வலியை, உப்பு சுற்றும் போது வேடிக்கையாகப் பார்த்துச் சிரித்திட மறந்தாள். பேத்திகள் நால்வரும் எங்கு சென்றும் துளசியைச் சுற்றி வணங்க வேண்டாம். ஏனென்றால், புனிதத் தாய் கங்கை அவர்களுக்குள்ளேயே அன்பு வடிவமாக கலந்திருந்தாள்.

கங்கம்மா என்று அழைத்துக் கொண்டே மகன் பணியிலிருந்துத் திரும்ப, இருடா.. என்று கைகளில் வைத்திருந்தக் காப்பியைக் கொடுத்தாள். கருணா என்று கருணையுடன் அழைத்துப் பெரியவ காவேரி வந்திருக்கா எனக் கூறினாள். மிகவும் களைப்பா இருந்ததனால தூங்கச் சொன்னேன் என்றாள். சரிம்மா... பார்க்கறேன் எனச் சொல்லிக் கொண்டிருந்த சமயத்தில் மாப்பிள்ளையும் உள்ளே வந்து நுழைந்தார். உடனே, பலகாரத்தை எடுத்து வந்து வைத்து அவரை உபசரித்தாள். மாமனாரும், மாப்பிள்ளையும் பேசிக் கொண்டிருந்த சமயத்தில் பேத்திகளைக் கவனிக்க வீதித் திண்ணைக்குச் சென்றாள்.

கரையோரத்தில் அமர்ந்திருந்த அல்லிக்கு விழியில் தன்னையறியாமல் கண்ணீர் வடிந்தது. துடைத்துக் கொண்டவளின் கண்கள் மறுபடியும் பரவசமாக இயற்கையை இரசிக்க ஆரம்பிக்க, இயற்கை அன்னையே நீ! எங்கு இருக்கிறாய்? இந்த வயல் வெளியிலா அல்லது அதோ தூரத்தில் தெரியும் அந்த மலையிலா? என்றவாறு, பெருமூச்சுடன் நினைவினுள் புதைந்தாள்.

வானம் மப்பும் மந்தாரமுமாக இருளத் துவங்கியது. பாட்டி, ஏண்டா.. கருணா இன்னும் நர்மதா வரலியே என்றவாறு வாசலுக்குச் சென்று அமர்ந்து கொண்டாள். பேத்திகளைத் தன் பக்கத்தில் வந்து அமர்ந்து கொண்டு பள்ளிப் பாடங்களைப் படிக்குமாறு கூறினாள். பாட்டியின் கண்களில், வீதியில் நர்மதா வருகிறாளா எனும் தேடலின் தவிப்பிருந்தன. அதற்குள் அல்லி அருகில் வந்து பாட்டி என்ன பாக்குறே, உனக்கு கண்ணு.. நல்லாத் தெரியுதா என்று கேலி செய்தாள். போடி... பொடிப் புள்ளே உங்கம்மா இன்னும் வரலை, அதைப் பார்க்க விட்டுட்டு என்னிடம் வந்து வம்பா செய்கிறாய் என்றாள். பாட்டி எங்கள நீதான பாத்துக்கறே, அதனாலதான் அம்மா தைரியமா வேலைக்கு போயிட்டு வர்றா என்றாள். மேலும், பாட்டி... பாட்டி அதோ பார் அம்மா.. என ஏமாற்றியபடி விளையாடினாள்.

அம்மா நர்மதா, வீட்டினுள் நுழைந்தவுடன், அப்பாடா! இன்னைக்கு பொழுத ஓட்டியாச்சு என்றாள். அம்மாடி மருமகளே... அந்தோ மேடை மேலே காப்பி வைச்சிருக்கேன் எடுத்துக்கோ என்றாள். அத்தே இன்னைக்கு சம்பளத் தேதி அதனால தான் லேட் ஆயிடுச்சு என்றாள். மாமியார் தயார் செய்து வைத்த இரவுப் பலகாரத்தை அனைவருக்கும் பரிமாற தட்டுக்களை வைத்தாள். நாட்கள் ஒவ்வொன்றாய் கழிந்திட மாதங்கள் வேகமாக உருண்டோடியது.

அல்லி, ஆமாம்! காலத்தின் சுழற்சி வேகமாகச் சுழலச் சுழல செய்திடும் வேலைகளிலும், முறைகளிலும் மாற்றம் வரத்தானே செய்கிறது. இன்னும் எவ்வளவோ அஞ்ஞான மாற்றம், விஞ்ஞான மாற்றம் வரத்தானே போகிறது. இப்போதுள்ள பெண்களுக்கு வேலைக்குச் செல்வது ஒரு பக்கம், பெரியவர்களின் துணையின்றி தவிப்பது ஒரு பக்கம், இருந்த போதிலும் உணர்வில் அன்பு மட்டும் நிலையானது என்பதில் சந்தேகமில்லை. அதில் மட்டும் மாற்றம் வரவில்லையே, வராது என்ற நினைவுக் குதிரை எட்டிப் பிடித்தது அடுத்த ஓட்டத்தை.

அதற்குள் அக்கா காவேரியின் பேறு காலம் வந்து கனிய ஆண் குழந்தையை வாரிசாகப் பெற்றுக் கொடுத்தாள். பாட்டிக்கு ஒரே மகிழ்ச்சி, கொள்ளுப்பேரனை எடுத்து முத்தமிட்டுத் தன் மருமகளிடம் நீயும் பாட்டி ஆகிவிட்டாய் எனக் கூறினாள். பாட்டி கங்காவும், மருமகள் நர்மதாவும், தங்களுக்குள் எவ்வளவு இடையூறுகள் இருந்தாலும், ஒருவரையொருவர் கடமையில் விட்டுக் கொடுக்காமல் பணியாற்றி மற்றவர்களுக்கு பாதையைத் தெளிவாக்கிக் காட்டினர்.

அன்பினால் உருவாக்கிய ஒவ்வொரு விதைகளும் இந்த பூமிக்கு கிடைத்த நல்ல நெல்மணிகளே. முளைத்த நெற்பயிர்கள் மென்மேலும் மக்களின் பசிப்பிணியைப் போக்கி, துயரைத் தீர்த்திடும் புண்ணிய தீர்த்தமாகும் என்று நினைத்தாள். அல்லி மீண்டும் சுயநினைவுக்கு வந்தவளாய் உணர, அவளின் கண்ணெதிரே பூத்திருந்த பசுமை அவளைப் பார்த்துச் சிரித்தது. அவள் பசுமையில் பதித்திருந்த தன் கண்ணைத் தாழ்த்தி அருகிருந்த நதியலையை நோக்கினாள். அதன் அழகும், நீரோட்டமும் தெளிவாகத் தெரிய மறுபடியும் சிலிர்த்து மலைத்தாள்.

பாட்டி கங்கா தன் மருமகளுக்கு செய்ய வேண்டிய அனைத்துக் கடமைகளையும் குறைவின்றிப் பூர்த்தி செய்து வைத்தாள். கங்காவின் ஆசையை யாருமே தெரிந்து கொள்ள இயலாது. ஏனெனில், அவளுக்கென்று தனி விருப்பம் எதுவுமே இருந்ததில்லை. தன் இளமை வாழ்க்கையில் எதைக் கற்றுக் கொண்டாளோ, இல்லையோ உயிர்களின் மீது நீங்காத அன்பைச் செலுத்தும் திறனைக் கற்றிருந்தாள். அனுதினமும் அதையே தாரக மந்திரமாய் அனைவருக்கும் புகட்டி விட்டாள். தலைமுறைகளுக்கும், தரணியில் தன்னை அறிந்தவர்களுக்கும் நீங்காத அன்பைக் கொடுத்து கருணை மலையாக உயர்ந்து நின்றாள்.
குன்றின் மீது குமரன் இருப்பான். அறிவேன். ஓ! குமரனின் தந்தைதான் சிவன். அப்படியென்றால், அவரின் தலைமீது தான் கங்கா தேவி வாசம் செய்கிறாள். ஆனால், சிவபெருமான் ருத்திரன் என்று தானே கேள்விப் பட்டிருக்கிறேன். ஆம்! அதனால் தான் அன்பின் தெய்வமான கங்கை அவரின் தலை மேல் அமர்ந்திருக்கிறாள். இல்லையென்றால் பிரளயம் அல்லவா ஏற்படும். ருத்திரம் இருக்குமிடத்தில் அன்பிருந்தால் பனிமலை உருவாவது இயற்கைதான். ஏனென்றால், அன்பு அனைத்தையும் வென்று குன்றின் மீது குடிகொள்ளும் என்பது உண்மைதான். பனிமலை உருகி பெருக்கெடுத்தால் தானே கங்கை கிளை ஆற்றுடன் கூடி மகிழ்கிறது. நினைப்பு என்னை ஆழ்த்துகிறது என்று தனக்குள்ளேயே சொல்லிக்கொண்டாள் அல்லி.

கங்கம்மா கருணாவிடம் வைத்த அன்பினால், அவனின் புதல்விகளுக்கு திருமணமாகி, அவர்களின் குழந்தைகள் வளர்ந்திடும் வரை வாழ்ந்திருந்தாள். முதுமைத் தள்ளாடி இமயத்தைப் பார்க்க, முக்தி முன்வந்து அன்பினை அணைக்க கருணாவின் மடியில் தன் தலையை வைத்துத் துளசித் தீர்த்தத்தைப் பருகினாள். அதன் குளிர்ச்சியில் மயங்கி கண்மூடி கங்கையில் கலந்தாள். ஆம்! வற்றாத அந்தப் புனித கங்கையைப் போலவே அன்பினால் புனிதமடைந்து ஆருயிர்களின் இதயத்திலே உரமேற்றி விட்டு இப்பூமித்தாயின் மடியைத் தழுவினாள்.

புனித கங்கையாக இந்தப் பூமியில் பாய்ந்து, தவழ்ந்து, பெருக்கெடுத்து ஓடிய வழியெல்லாம் இன்பமடைய அனைவருக்கும் தாகத்தைத் தணித்திடுவாள். கங்கம்மாவின் ஒரு சிலப் பணியினை மட்டும் தானே நினைத்துப் பார்த்தேன், மீதத்தினை.. சரி....சரி... இந்தப் பூமியில் தானே தவழ்கின்றாள். புனித நதி பாய்ந்தோடிய இடங்களில் எல்லாம் அதற்குக் கிளைகள் உண்டு. ஓ... அதன் பெயர் தான் நர்மதா, அமராவதி, சரஸ்வதி மற்றும் காவேரி எனத் தொடர்கிறதா, தொடரட்டும். கங்கையுடன் காவிரியை இணைத்துப் பார்த்து விட்டு, அன்பில் உருவாகிய புரட்சியாக மலைப்பிலிருந்து மீண்டாள்.

அல்லி நான் உன் கரைமீது அமர்ந்திருந்தாலும் உன்னோடையில் பிறந்தவள் தான். உன்மீது தவழ்ந்து சங்கமத்தில் கங்கையான உன்னைச் சந்திக்கிறேன். ஆனால், இப்போதும் உன்னைப் பார்க்கின்றேன் கண்ணெதிரே... ஆ!.. அதோ!.. அந்த பசுமையான வயலின் அந்தப் பக்கத்தில் நீங்காத அன்பாலே மலையாக நிற்கின்றாய் என்று எழுந்து மெதுவாக இயற்கையை ரசித்துக் கொண்டே நடக்கத் துவங்கினாள்.

அல்லி நடந்திட அவளின் அடிகளில் அன்றையப் பணிகள் மெல்லத் தொடர ஆரம்பித்தது. இவ்வளவு நேரம் எவ்வளவு இனிமையாகச் சென்றது என மகிழ்ச்சியுற்றாள். அல்லிக்கு அவள் நினைத்துப் பார்த்த பாட்டி கங்கம்மாவின் நீங்காத அன்பே இவ்வளவு இனிமையாக இருக்கும் பொழுது, இம்மாநிலத்தில் உள்ளோர் அனைவரும் அன்பைப் போற்றினால் எவ்வளவு இனிமையாக இருக்கும் என்று எண்ணிப் பார்த்தாள். தூய அன்பை வெளிக் கொணரவும், அதனால் அடையப் போகும் நன்மைகளை அடையவும், அளவுக்கு மீறிய சக்திகள் நம்மிடம் வேண்டும். எனவே, கங்கம்மா! நீ எப்படித்தான் எல்லாப் பணிகளையும் எளிமையாகச் செய்தாயோ! எங்கள் அனைவருக்கும் அந்தச் சக்தியைக் கொடுத்துவிடு என்று தேற்றிக் கொள்ள வேண்டினாள்.

-/ அகிலமணி ஸ்ரீவித்யா.