Wednesday, February 24, 2010

‘முதல் குழந்தை’

மடல்வாழைத் தோரணம்
மாக்கோலப் பாமணம்!
தொட்டில் குழந்தை
தெய்வீகத் தேனினம்!
குலத்தோர் வாழ்த்தும்
குங்குமப் பூவினம்!
முதன்மை வாரிசு
முற்றிலும் கமழ்மணம்!
தத்தை மொழிகள்
தடதட நடையினம்!
சுட்டும் விழிகள்
சிலம்பு மொழியினம்!
கொழுத்தக் கன்னம்
கொஞ்சும் சுவையினம்!
விடியலின் சாயல்
வெற்றிலைக் கொழுந்தினம்!
மங்கலம் அருளும்
மதிவதன மானினம்!
சுந்தரம் சுதந்திரம்
சமநிலைப் பாலினம்!
திருவிற்கு உருவாகும்
திருஞானப் பிறப்பினம்!
இச்சை வரவேற்கும்
இளமுல்லைச் சிரிப்பினம்!
ஓடியாடிக் கவரும்
ஒளியானச் சேயினம்!
தடையின்றி இயங்கும்
தரணியின் அணியினம்!
மதிப்பு நல்கும்
மழலைச் சொல்லினம்!
சம்சார சம்பந்தம்
செழிக்க வருமினம்!
மலரும் மொட்டுகள்
மகிழ்ச்சி மழையினம்!
வாழ்வின் அர்த்தம்
வசந்த மெல்லினம்!
ஆண் பெண்
அடைமொழிப் பேரினம்!
வாரிசு இன்மை
வருத்தும் போரினம்!
மலட்டுத் தன்மை
முறிக்கும் பயனினம்!
முதல் முத்தம்
முதல் திருமணம்!
முதல் தொழில்
முதல் மூலதனம்!
முதல் தோற்றம்
முதல் திருவினம்!
பெருமை பெருமை
படியாகும் தலைப்பினம்!
கருவுயிர் சிதைத்தல்
கடுந்துயர் வாழினம்!
முதல் குழந்தை
முன்னின்றுக் காப்போம்!!!!

-அகிலமணி ஸ்ரீவித்யா.

Tuesday, February 16, 2010

அன்று கவிமாலையில்...

கவிமாலை குடும்பம் ஒருசேர
களிப்புறும் நாளன்றுக் கண்டேன்!
சீனர்கள் புத்தாண்டு காதலர்கள்
சேருகின்ற நன்நாளும் கண்டேன்!
அயர்ந்து உறங்காது அனைவரும்
அறிவுடன் உறவாடக் கண்டேன்!
குடும்பம் ஐம்பத்து நபர்களுடன்
கோரை மேலமரக் கண்டேன்!
வந்தோர் வருவோர் கலந்தாட
வானம் பாடியாகக் கண்டேன்!
காதலர் தினத்தில் காதலை
கூட்டச் சந்திப்பில் கண்டேன்!
தமிழில் வாழ்த்து அழகாக
தரிக்கும் ஆர்வம் கண்டேன்!
சத்தியன் விஜயன் வள்ளியும்
சீர்துதி ராஜனும் கண்டேன்!
தியாக இரமேஷ் காட்சிக்கு
திரட்டும் பாங்குக் கண்டேன்!
கலையும் புவனமும் மலராக
குழந்தை ரதியரைக் கண்டேன்!
குழுவில் பல்வேறு வண்ணம்
குவித்த திட்டம் கண்டேன்!
ஒருசில மணித்துளி நினைத்தேன்
ஒருமித்து ஒருநாளே கண்டேன்!
நீலத்திரை ஆழ்கடல் கரையோரம்
நர்த்தனக் கப்பல்கள் கண்டேன்!
ஓடியோடி விளையாடும் சிறுவராக
ஓய்ந்தாடும் முதியோரும் கண்டேன்!
புதையல் வேட்டை ஆரம்பமாக
பூரிக்கும் நெஞ்சுரம் கண்டேன்!
வேங்கடன் வெற்றி முறையாக
வியர்க்கும் மக்கள் கண்டேன்!
கரவொலி குரலொலி மேவிடும்
கணங்கள் கரையக் கண்டேன்!
கோவிந்த ராசுவின் கம்பீரம்
கருணை அரசாளக் கண்டேன்!
இளங்கோ பாரதி ஆர்வலர்கள்
இன்பம் எல்லாம் கண்டேன்!
அன்பு அழகன் எங்கென்று
அலைகள் ஆர்ப்பரிக்கக் கண்டேன்!
கூடல்.. ஆடல்.. பாடல்..
கடலலை முழங்கக் கண்டேன்!
பிரிவு இணையும் காலம்
பின்னரும் தொடரும் கண்டேன்!
அறிவு அர்த்தம் அன்பு
ஆர்வம் ஆய்வாகக் கண்டேன்!
காத்துப் பூத்து நிலையுறக்
கவியும் வடித்துக் கண்டேன்..!!!
- அகிலமணி ஸ்ரீவித்யா, 15/02/2010.