Saturday, August 19, 2017

புதுமைப் பெண்ணே புதிய முடிவெடு! (ராஜலக்ஷ்மி கல்லூரிக் கவியரங்கம் சார்பு, கோவை) 09/08/2017 புதுமைப் பெண்ணே புதுமைப் பெண்ணே புரட்சிப் புவியில் வாழ்கிறாய் - மின்னும் பொன்னும் பொருளும் மடமை என்றே உலகில் அணிவதை விடுக்கிறாய் - சொல்லும் சொல்லில் கூரிய அம்பை வைத்து வையம் இளையரை வளர்க்கிறாய் - வெல்லும் வழிமுறை வேலை யாற்றியே அல்லும் பகலும் வாழ்வில் உயர்கிறாய் - சகமே! தூண்டும் பரப்பில் துண்டு நிலத்தில் தூங்கா விழியுடன் எழுகிறாய் - செல்லப் பிள்ளை முகராமல் செங்கீரை உண்ணாமல் புத்தகப் பாரில் மலர்கிறாய் - வண்ணப் பூக்கள் சூடாமல் சட்டைப் பேண்ட்டில் பலதேசஞ் சுற்றிப் படிக்கிறாய் - சிக்கனம் மறந்துச் சேமிப்பு இன்றிச் சிலகால பூமியில் தனித்துப் புண்ணியம் - விடுத்தே! பிள்ளையர் எங்கே நல்வாழ்வு எங்கே பசுமை எங்கே பாரதம் - எங்கே மரபு எங்கே மாண்பு எங்கே மகிமைத் தரணியில் மன்னவர் - எங்கே விடுதியிற் சேர்ந்தே விண்மீன் கூட்டம் கடமை வெறியில் நானிலம் - விற்றே நல்லதை அழித்து நாடுமே காண வல்லமை வளர்த்து வாழ்வாய் - பெண்ணே! பழமைப் போற்றிய ஒளவைப் பாட்டி புனிதங் காத்துப் பல்லுலகு - வாழ்த்த வளர்ந்த நோக்கில் வசந்தம் வீழ்த்தி வளரும் பிள்ளாய் புவனங் - கருக்க எருக்கம் பார்த்தும் இறுக்கம் ஆனாய் எம்மதிப் பெண்ணே மதியுலகு - காணே அடிமை மதியழிவு மேன்மோகக் கீழ்க்குணம் கயமை வலம்வரச் சரியாம் - பாரே! அழகே அமுதே அன்னக் கொடியே வையமே வாழ வாழவே - முடிவெடு இணையே துணையே இன்பக் கனியே சகமே தழைக்கச் சடுதியில் - முடிவெடு உளமே உணர்வே உண்மைச் சுவையே உலகமே உய்ய உன்னத - முடிவெடு பெண்டுப் பிள்ளை வீடுநீள் அகிலம் பெருமைப் பீடுறப் புதிய - முடிவெடு!! -கவிதாயினி அகிலமணி ஸ்ரீவித்யா. கோவை, 07/08/2017.