Thursday, October 28, 2021

 இந்தியச் சுதந்திர தினவிழா வாழ்த்துப்பா

             (75- ஆம் ஆண்டு - 15 ஆகஸ்ட் 2021)
(வசந்த வாசல் கவிமன்றம் - இணையவழி - 8.8.2021)

                   (பல்லவி)
பாரில் பாரில் முன்னேறு
பாரதம் போலே முன்னேறு

           (அனுபல்லவி)
வானில் வலம்வரும் சூரியன்போல்
வான்புகழ் வல்லரசு நாட்டிலே                          (பாரில்...)

            (சரணம் 1)
பாரதக் கொடியின் வண்ணம்போல்
பாரின மக்கள் கலந்தாடி
பசுமை பாரதம் காப்போம்
புண்ணிய நதிகள் இணைப்போம்

         (சரணம் 2)
அடிமைப் பட்டதோ அக்காலம்
அனைத்தும் தொழில்நுட்பம் இக்காலம்
அன்பெனும்  ஆயுதக் கொடியேந்தி
அவனியில்  வாழ்வோம் பல்லாண்டு....     (பாரில்....)

         (சரணம் 3)
எழுபத்து ஐந்தாம் ஆண்டிலே
எங்கள் சுதந்திரம் அம்ரூத்
எழுவீர் உற்சவம் கொண்டாடி
எதிலும் பரணிப் புகழ்பாடி               (பாரில்....)


வந்தே மாதரம் வந்தே மாதரம்
வாழ்க சுதந்திரம் வாழ்க இந்தியா
வாழ்க  பாரதத் தாயின் மணிக்கொடியே!         
          - சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, கோவை.


விஞ்ஞான வித்தகர் அப்துல் கலாம்!
(காலம்: 15.10.1931 -  27.07.2015)
வசந்த வாசல் கவிமன்றம்
27.09.2021 : (வஞ்சிப்பா)

                    (1)
ஜைனுலாப்தீன்  ஆஷியம்மா பெற்றெடுத்த
செல்லமகனார் ஏ.பி. ஜே அப்துல்கலாம்
ஏழ்மையில் இசுலாமியர் ஏறுபோல்
ஏழுகடல் ஏழுமலை எழிற்பூமி
யாவையும்  வாழ்த்தத் தமிழ்நாடுய
இராமேஸ்வரம் தலத்தில் பிறந்தார்
செய்தித்தாள் விநியோகம் செய்தவர்
செய்திட்ட நற்பணியால் வித்தகராகவே!

                 (2)
இயற்பியல், விண்வெளிப் பொறியியல்
இன்னபிற கல்விமுறைப் பட்டங்கள்
அறிவுமொழி கவிதைநூல்கள் ஆக்கிப்பொக்ரான்
அணுநுட்பம் ஆய்ந்துத்துணைக் கோள்ஏவுகணை
செலுத்திநல் விஞ்ஞானியாக இந்தியராணுவச்
சாதனையர் ராக்கெட்டின் பிதாவாகப்
போற்றப்பட பத்மபூஷண் பாரத்ரத்னா
போன்றவிருது பெற்றுத்திறனால் தலைவராகியே!

                      (3)
அகிலத்தார் போற்றிய ஜனாதிபதி
அன்னைப் பூமியில் தந்தையாய்
திருமண வாழ்க்கைத் துறந்துபீஷ்மத்
தமிழ்க்குரு போல்தனியராய்  இளையர்கள்
உற்சாகம் வளர்த்துநாடு வல்லரசாக
வான்தொடும் கனவுகளை காணச்சொல்லி
விமானட்ரோன் துப்பறிஞானம் விஞ்ஞானமென
விரிவுரைகள் ஆற்றும்போது வான்கலந்தாரே!
        - சித்திரக் கவிஞர் அகிலமணி ஶ்ரீவித்யா, கோவை, 24.09.2021.




தேடினால் கிடைக்கும் செல்வங்கள்!
1. தேனமுதத் தமிழ்ச் சங்கம் - மயிலாடுதுறை
2. தமிழ் அமெரிக்கா தொலைக்காட்சி - அமெரிக்கா
3. வசந்த வாசல் கவிமன்றம் - கோவை
இணைந்து வழங்கிய நிகழ்ச்சி :-  ஆசிரிய விருத்தம் (எண் சீர்)
( 24.10.2021, ஞாயிறு, மாலை 5.00 மணி)

                             (1)

எத்தனைக் கோடிமக்கள் இவ்வுலக நாட்டிலே
          வறியோர் தனவான் நடுத்தரம் என்றே
எத்தனைப் பிரிவுகள் வாழும் வாழ்விலே
          நானிலர் வாழும் சமுதாயக் கூட்டிலே
எத்தகுக் கல்விநுட்பம் எங்குப் பயனோ
          எங்கும் தேடித்தேடி வாழ்க்கைப் பயணம்
எத்திசைப் பணியோ அத்திசையிற் செல்வம்
          குடும்பம் சொந்தம் பந்தம்  வாழ்த்தியே!

                         (2)

நித்தம் நித்தம் உண்டு  உறங்கும்
          நிலையா உயிர்கள் மத்தியில் மனிதராய்
எத்தவம் செய்தோம் செல்வங்கள் தேடிடப்
          பதினாறுச் செல்வமும் பெற்று வாழவே
புத்தியும் சக்தியும் நாளும் கேட்கிறோம்
          புண்ணியக்  கடவுள்முன் சத்தியஐக் கரங்கூப்பி
புத்தம் சீக்கியம் இசுலாம் கிறிஸ்தவம்
          இந்து எனமதத்தார் யாரும் கூடிவுழைத்தே!

                         (3)

தீதும் நன்றும் பிறர்தர வாரா
          தீயன ஒதுக்கிடு; அல்லும்பகலும் ஈட்டிடு
எதுதான் வரினும் அச்சம் தவிர்த்திடு
          என்றோ ஒருநாள் வெல்வோம் நிச்சயம்
இதுதான் வேண்டுமென வஞ்சித்துக் கொன்றுக்
          களவாடிக் கூர்ச்சொல்லால் துன்புறுத்திக் கொய்வதேன்
எதுவும் கிடைக்கப் பாவம் புரியாமல்
           சத்திய நியதியில் தேடியடைவோம் செல்வமே!
  - சித்திரக் கவிஞர் அகிலமணி ஶ்ரீவித்யா, கோவை, 22.10.2021.