Tuesday, January 26, 2021

பன்னிரு இதழ்களிலும் என்கவிதை! (Episode -12)

 

12. சுதந்திர இந்தியாவும் சுடராதோ!

 

                  (1)

வந்தே மாதரம் வந்தே மாதரம்

வணங்கி வான்புகழ் வாழ்த்துவோம்

இயற்கை அரண்கள் இன்பம்

யாவையும் காப்போம்

பசுமை பசுமை பார்ப்புகழ்

வோங்க உழைப்போம்

மேலை உலகோர் வியக்க

மேதியில் வளமை வென்று வாழ்த்துவோம்!

 

                  (2)

 

வந்தே மாதரம் வந்தே மாதரம்

வணங்கி வான்புகழ் வாழ்த்துவோம்

தொழிலில் நுட்பம் கற்றே

தொல்லை யாவும் அழிப்போம்

துளைக்கும் துன்பம் துரத்தி

துரிதப் பணிகள் ஆற்றுவோம்

கற்போம் கொரோனா பாடம்

கடமைக் கடவுள் போற்றி வாழ்த்துவோம்!

 

                  (3)

 

வந்தே மாதரம் வந்தே மாதரம்

வணங்கி வான்புகழ் வாழ்த்துவோம்

இந்திய நாடு ஒன்றே

இருகரங் கூப்பு நன்றே

முன்னிரும் போர்கள் விலக்கி

முன்னேற்றப் பாதைத் துணிந்து

மக்கள் நலனிற் கலந்து

மண்ணின் மரபுக் காத்து வாழ்த்துவோம்!

            -சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, 30.6.2020.

பன்னிரு இதழ்களிலும் என்கவிதை! (Episode - 11)

 

11. பெண்டிரின் புகழே!

                  (1)

 

இன்பமோ துன்பமோ புகழுருப் பெண்ணே

இன்னற் காலத்தில் இல்லத்தில் பேரொளி

மழலையர்ப் பேச்சுக்குத் தேன்குரல் எதிரொலி

மட்டிலா மகிழ்ச்சி மக்களுக்குச் சேர்த்தே

நித்தமும் காண்பாள் நிறைமதி நிம்மதி

நிழலாக வீட்டிலே முழுமையும் காப்பாள்

சமையற் செய்துமே நற்சுவைக் காப்பாள்

சுகத்துடன் குடும்ப நலமே வாழப்புகழே!

                 

                  (2)

 

நோய்க்கால மாமருந்து அன்பவள் கருணை

நோய்விலக வைத்தியம் பேருதவிப் பாரிலே

சிக்கனம் கண்ணியம் காத்தனர்ப் பெண்டிர்

சிற்சில மூலிகையில் நீராவி வைத்தியம்

கொரோனா வைரஸ் தாக்கா வண்ணம்

கொடுங்கோல் வறுமை மாய்க்கா வண்ணம்

தன்னுழைப்பு நல்கியே செவிலியர்த் தாயாகி

தன்னுடன் பல்லோரின் நல்லுயிர்க் காத்தே!

 

                  (3)

 

அங்காடிச் சந்தை அலுவலகம் தாண்டியே

அனுதின வரிகளும் இரட்டிப்பு ஆகிடத்

தயங்காமல் தன்குடும்பத் தேரினை நாளும்

தள்ளாமல் ஓட்டினள் தூமலர் ஆகினள்

துகில்தரும் பெண்மணி துயரறுப் பெண்மணி

தெள்ளமுதப் பெண்மணி தேசியப் பெண்மணி

பலகாலச் சேவைக்குப் பொன்னாரம் சூட்டியே

பெண்குலம் வாழ்த்துவம் புகழொலி வாழ்கவே!

            -சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, 30.06.2020.

 

 

 

பன்னிரு இதழ்களிலும் என்கவிதை! (Episode - 10)

 

10. சமூகத் திருமணமும் விழாவும்!

(கொரோனா நோய்க்காலம் - முன்னும் பின்னும்)

 

                  (1)

 

அவசரக் காலத்தில் அன்றாடக் கொண்டாட்டம்

அன்பே இல்லை இல்லை

ஆண்பாதி பெண்பாதி

ஆடலும் பாடலும் விமரிசைத்

திருமணம் நடக்கவே இல்லை

முன்செய்த நிச்சயம் தள்ளிப்போக

முன்னும் பின்னுமாய்

சமூகத் திருமணம் திருமணம் திருமணமே!

 

                  (2)

 

திருமண மண்டபம் கோவில் அனைத்துமே

தள்ளின தள்ளின விழாக்களை

மகாகும்ப நன்னீரோ மாசக்தி

வேள்வியோ கொண்டாட்ட

நாளோ இல்லை இல்லை

வழிபாடு வித்தை கலைகள்

வசந்த உற்சவம் யாவுந்தடையே

தேரோட்டம் தெப்போட்டம் காண்போரும் இல்லையே!

 

                  (3)

 

கூட்டமாய் மக்கள் சேர்வதும் இல்லை

சோர்வாய்ச் சாய்ந்து உறங்கவும்

இல்லை இல்லை

துள்ளலாய்ப் பண்டிகை விழாவும்

புண்ணிய யாத்திரை மேதியுலா

இல்லை போகவரச் செய்பணிச்

செய்தே அகமோ புறமோ

சிலையாய் சிந்தனைச் சவமாய் வாழ்ந்திடவே!

      -சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, 30.6.2020.

பன்னிரு இதழ்களிலும் என்கவிதை! ( Episode - 9)

 

9. உதவியா இடையூறா!

உள்ளூரோ வெளிமாநில இடங்களோ

உதவிக்கு ஆம்புலன்ஸ் வாகனம்

முகாமில் கொரோனாப் பரிசோதனை

மருத்துவ வசதிகள் நோய்க்கான

மாத்திரை காப்பீடு தனிமைக்கு

மருத்துவ மனையிற் தனிப்படுக்கை

நியாய விலைக்கடை வழங்கும்

நிவாரண பொருட்கள் பணவுதவி நல்கவரசே!

 

            (2)

 

அச்சத்தில் உறைந்த மக்களை

அக்கறை கொள்ளச் செய்து

வாழ்வாதாரப் பணிக்குத் தளர்வுகள்

வாய்ப்புநல் பணிகள் உருவாக்கித்

தந்தாலும் தினப்பணி ஊழியர்கள்

தவித்துத் தன்னார்வலர் அளித்தக்

கொடைகள் பெற்றுமேன் வசிக்க

கொணர இயலா வசந்தம் இடையூறே!

 

            (3)

 

பற்பல நாட்டோர் தன்னாட்டுப்

பல்லின மக்களைத் தான்காக்க

விமானச் சேவையிற் சிறந்து

விரைவில் தாயகஞ் சேர்க்க

உள்ளோரும் வந்தோரும் கூடிமேல்

உழைத்துப் பிழைக்க வழிமுறை

வளர்ச்சியா வளமா வளரும்

வரவேற்கும் உள்ளத்தார் வாழ்த்த வாழ்க்கையே!

            -சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, 29.06.2020.

 

 

 

 

பன்னிரு இதழ்களிலும் என்கவிதை! (Episode - 8)

 

8. கோவிட் 19 - புனிதம் எங்கே!

 

         (1)

கோவிட் பத்தொன்பது கொரோனா

கோவில் வழிபாட்டுத் தலங்களை

விட்டுவிட வில்லை நோய்க்கு

வேண்டுதல் செய்துப் புண்ணியங்

காண்கும் பக்தர்மேற் தொற்றக்

கோவில் நடைகள் சாத்தின

      எங்கோ

புனிதம் இருளில் இறைவன் சன்னதியே!

 

            (2)

 

திருக்கோவில் தேவாலயம் கோட்டைமசூதி

திருத்தலங்கள் அனைத்தும் வெறிச்சோடி

ஆர்ப்பரிக்கும் கடலலை யிசைராகம்

ஆர்வலர்கள் கேட்காமல் மதிவேகம்

கட்டுக்குள் அடங்காமல் மனிதநேயம்

கடந்தாசைக் கூடிகூடியே இதயந்தேய

      தீயொழுக்கம்

மண்ணின மக்களைத் துண்டாக்க கொல்நோயே!

 

            (3)

 

கட்டுப்பாடு தளர்வுகள் வந்தாலும்

காணாத தளர்வுதான் வழிபாட்டில்

முறைமைத் தவறாது முன்னேற

மறையும் பிணிகள் மெய்யாக

அஞ்ஞானம் விஞ்ஞானம் மெய்ஞானம்

அன்பகத்தைச் சிதைக்கா வண்ணம்

      ஆன்மிகப்

பாதையில் நன்கொளிர வைரஸ்கொரோனா தானழியுமே!

            -சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, 29.06.2020.

 

 

பன்னிரு இதழ்களிலும் என்கவிதை! (Episode - 7)

 

7. கல்வியும் கேள்வியும்!

           

            (1)

 

விழித்திரு விலகியிரு வீட்டிலிரு என்ற

விதிமுறைத் தொடரப் பள்ளிகள் கல்லூரி

பல்கலைக் கழகங்கள் பன்னிசைக் கூடங்கள்

பற்பலவும் மூடப்பட்டு மாணவர்கள் இல்லடங்க

செய்வது அறியாமல் பெற்றோர்தம் வேலைகள்

பாரமாகி இன்னலால் கேள்விகள் எழுந்தன

எந்நாள் இந்நிலை மாறுமோ

அந்நாள் விரைவில் வாராதோ மாற்றமே!

 

            (2)

 

துள்ளல் நடையில் எழுந்து விரைவில்

தத்தம் கடமை முடித்துத் தனியார்

வகுப்பில் பயின்றுத் தேர்வில் வெற்றியை

விதைக்க நினைத்துக் காரியங் கெடமேல்

யாவரும் பொதுநிலைத் தேர்வில் வாகையர்

யாவரும் வாகையர் என்முடிவு யேற்க

அறிவும் அறிவியலும் யெங்கே

அன்றாட வாழ்வில் கொரோனா தாக்கமே!

 

            (3)

 

அடுத்து அடுத்து விடுமுறை மகிழ்ச்சி

அளித்ததோ இல்லையோ ஆர்வமாய் இணையம்

கல்வியை வளர்த்துக் காட்டின அனலாய்

கணிணிமுன் காந்தக் கண்கள் சிவக்க

கவலை மனவழுத்தஞ் சேர்ந்து வல்லரசு

கற்பனைக் கனவாக மாயமோ ஞானக்

கணைகள் நுரையீரல் தாக்க

கருப்பு வெள்ளைத் திசையிலே கொரோனாவே!

      -சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, 29.6.2020.

பன்னிரு இதழ்களிலும் என்கவிதை! (Episode - 6)

 

6. மருத்துவமும் காவலும்!

 

                  (1)

 

வைரஸ் கொரோனா நோய்க்கான மாமருந்து

வையத்தில் இல்லை இல்லை

வானத்தில் உள்ளதோ

ஆய்விலே அறிவம்

வாழ்நாள் வரையில் தொடர்ந்து

வருமோ தடுப்பூசி இன்றியே

வாழ்க்கை எப்படி வாழ்வது

வாழ்பவர்க் கண்டே வாழ்வைக் கற்கவே!

 

            (2)

ஆயுர்வேதம் ஆங்கிலம் சித்தா வைத்தியம்

ஆனாலும் தன்கவனம் தேவை

இருமல் தும்மல் தொண்டை

வலியுடன் காய்ச்சல்

மூச்சுத் திணறல் வந்திடக்

கொரோனா பி.சி.ஆர் டெஸ்ட்டும்

சோதனைச் செய்தலும் நன்றே

பரவும் பரவும் நோய்தான் மானுடரே!

 

            (3)

கடமை என்றால் கசப்பா இனிப்பா

கடந்துச் செல்லும் மருத்துவத்

துறையும் காவற் துறையும்

துரிதமாய்ச் செயற்பட

பகலும் இரவும் சான்றே

பட்டமும் சட்டமும் ஊக்குவிக்க

பந்தமும் சுற்றமும் நலமுற

எந்நாளும் நன்நாளாய் சேவைக்குச் செயமே!

      -சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, 28.06.2020.

 

பன்னிரு இதழ்களிலும் என்கவிதை! (Episode - 5)

 

5. பாதுகாப்புக் கட்டாயமே!

           (1)

கர்ணன் அணிந்துக் கொண்டக் கவசமோ

கவலைத் துன்பம் போக்குங் கவசமோ

கொரோனா வைரஸ் கிருமித் தொற்றாமல்

காக்கும் கவசமே கவசம் கவசம்

கட்டாயச் சட்டம் கொடுத்தக் கவசமிது

கந்தல் அணிவோர் முதலாகக் கோட்டை

ஆள்வோர் வரையில் யாவரும் அவரவர்

ஆசைத் துறந்து முகக்கவசம் மாஸ்க்அணிந்தே!

 

            (2)

 

இல்லமோ அலுவல் இடமோ எதிலும்

இந்நோய்ப் பரவாமல் பாதுகாக்கத் தூய்மைப்

பணிக்குச் சானிடைசர் மேற்தெளித்துக் காலுறைக்

கையுறை இடைவெளி எச்சரிக்கைக் கொண்டே

விழிப்பாக மக்களினம் தெள்ளணிந்து நல்லன

வகுத்துப் பாடங்கள் கற்றுக் கொள்ள

தேசம்விட்டு தேசம் மாநிலம்விட்டு மாநிலம்

தேவைக்கு மட்டுமே சென்றுவரக் கற்றனரே!

 

            (3)

 

தூரம் தூரம் என்பறந்து என்செய்ய

துன்பம் எங்கும் பற்றித் தேய்க்க

உலகம் கற்றுத் தந்தப் பாடத்தில்

உண்மை உன்னதம் உறவுகள் யாவும்

நொடியிற் புரிந்து மரபிலே கூடினர்

நோயற்ற வாழ்வே குறைவற்றச் செல்வமென

பாராளும் சீமானோ மற்குடியோ நோய்க்குப்

பார்மருந்துப் பாதுகாப்பு பாதுகாப்பு தேடியே!  

            -சித்திரக் கவிஞர் அகிலமணி ஸ்ரீவித்யா, 28.06.2020.